தமிழ்நாட்டின் மிகவும் பரபரப்பான நகரமாகவும், மக்கள் தொகை அதிகமுள்ள நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இதனால், சென்னையில் எப்போதும் போக்குவரத்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகளவிலும், பரபரப்பாகவும் காணப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.


சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை வழியாக சென்ட்ரல் மார்க்கமாக விம்கோ நகர் வரையிலும், விமான நிலையம் – பரங்கிமலை ஆகிய இரு நிலையங்களில் இருந்து புறப்பட்டு கோயம்பேடு மார்க்கமாக சென்ட்ரல் வரையிலும் மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வருகிறது.




தற்போது, அடுத்தகட்டமாக பல்வேறு இடங்களில் மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் குறித்து நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறியதாவது,


“ மெட்ரோ ரயில் சேவைக்காக கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி இடையில் நடந்து வரும் பணிகள் வரும் 2026ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்றாலும், உயர்மட்ட பாதைக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போது சாலையில் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் அதிக இடம் தேவையில்லை. இதனால், பணிகள் நடக்கும் பகுதிகளில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அப்புறப்படுத்தப்படும். இதனால், போக்குவரத்திற்கான இடம் அதிகரிக்கும். இதனால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் குறையும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.”


இவ்வாறு அவர் கூறினார்.




பூந்தமல்லி வரையிலான மெட்ரோ பணிகளுக்காக தற்போது வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் மெட்ரோ நிலையம், மெட்ரோ வழித்தடத்திற்காக ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலைகளின் நடுவே இநத ராட்சத தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதால் தற்போது முக்கிய சாலையான அந்த சாலையில், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால், பணிகள் எப்போது முடிவடையும் என்று பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.


சென்னையில் மெட்ரோ சேவைகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு நாளுக்கு நாள் மெட்ரோ சேவைகள் பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் சென்னையில் மட்டும் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க: Seeman on Prabhakaran Alive: "பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க.." - பொங்கிய சீமான்


மேலும் படிக்க: 10th Tamil Question Bank: 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் எளிதாக சதம் அடிக்கலாம்; மாதிரி வினாத்தாள் இதோ!