தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை பேருந்துகள் இயக்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.


திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள்:


இந்த கோரிக்கையை ஏற்று வரும் 23-ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு கூடுதலாக 44 பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதி முதல் வார இறுதி நாட்களான வெள்ளி சனிக்கிழமையில் பேருந்து இயக்கப்படும், அதேபோன்று ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


இதுகுறித்து பொதுமக்களிடம் பேசுகையில்


திருவண்ணாமலையிலிருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வேலை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். வேலை செய்யும் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் முன்பெல்லாம் கோயம்பேட்டிலிருந்து மற்றொரு பேருந்து பிடித்து தாங்கள் இருக்கும் இடத்திற்கு செல்வோம், ஆனால் தற்போது கிளாம்பாக்கத்திலேயே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் நாங்கள் தங்கி உள்ள இடத்திற்குச் செல்ல இரண்டு பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது மட்டும் இன்றி நாங்கள் செல்ல ஒரு மணியிலிருந்து 2 மணி நேரம் செலவாகின்றது. இதனால் சரியான நேரத்திற்கு தாங்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல முடியவில்லை, அதனால் திருவண்ணாமலையிலிருந்து கோயம்பேட்டிற்கு தினசரி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என இவ்வாறு தெரிவித்தனர்.