ஆறுகளை சுற்றி நாகரிகம் வளர்ந்தது, நீர் நிலைகளை நம்பியே ஒவ்வொரு நாகரிகமும் எழுச்சி பெற்றது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த காலகட்டத்திலும் ஒரு சில இடங்களில் ஆற்றைக் கடப்பதற்கு, உயர்மட்ட மேம்பாலங்கள் இல்லாதது ஆற்றை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு, பிரச்சனையாகவே இருந்து வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், தொடர்ந்து ஆற்றில் பல்வேறு இடங்களில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொசஸ்தலை ஆறு

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மடியூர் - நாலூர் கம்பவார்பாளையம் கிராமங்களுக்கு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக மடியூர், வழுதிகைமேடு, புதுக்குப்பம், நெற்குன்றம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ளன. 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக பொன்னேரி வந்து செல்கின்றனர். 

பல ஆண்டுகள் கோரிக்கை 

30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பொன்னேரி பகுதிக்கு வர வேண்டும் என்றால், கொசஸ்தலை ஆற்றைக் கடந்து வரவேண்டிய நிலை இருந்து வருகிறது. இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். கிராம மக்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில், மடியூர்- நாலூர் கம்பவார்பாளையம் கிராமங்களுக்கு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. 

உயர்மட்ட பாலம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு சுமார் 18.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டன. முதற்கட்டமாக ஆற்றின் ஒன்பது இடங்களில் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டது. இந்த உயர்மட்ட பாலம் 210 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலத்தில் ஓடு பாதையுடன் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

இறுதி கட்டப் பணிகள் 

ஓடுபாதைகளுக்கு இருபுறமும் நடைபாதை, தடுப்புச் சுவர்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் வெளியேறுவதற்கும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. உயர்மட்ட பாலத்தில் முக்கிய பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதி கட்டமாக இருபுறமும் முன்னுரிமீட்டர் தொலைவிற்கு இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஒரு சில வாரங்களில் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட பாலம் பொன்னேரி- திருவெற்றியூர் மற்றும் சீமாவரம்- காரனோடை ஆகிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைய உள்ளது.

உயர்மட்ட பாலத்தின் பெரும்பாலானம் பணிகள் முடிவடைந்துள்ளன இருபுறமும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, 30 கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.