சென்னை மெட்ரோ..
சென்னை பொது மக்களுக்கு சமீப காலமாக வரப் பிரசாதமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான க்ரீன் லைன் வழித்தடம், விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையிலான ப்ளூ வழித்தடம் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றின் மூலம் அதிகளவு பொதுமக்கள் தினமும் பயணித்து வருகின்றனர். சென்னையில் மெட்ரோ சேவைகள் துவங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் ஆகின்றன.
12 கோடி நபர்கள் பயணம்..
தற்போது வரை சென்னையில் மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ள பயணங்களின் மொத்த எண்ணிக்கை 12 கோடி மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 - 26.34 லட்சம்
2016 - 36.37 லட்சம்
2017 - 73.99 லட்சம்
2018 - 1.48 கோடி
2019 - 3.13 கோடி
2020 - 1.18 கோடி
2021 - 2.54 கோடி
2022 - 2.44 கோடி
இந்த விபரங்களின் படி, 2019-ம் ஆண்டு அதிகபட்சமாக 3.13 கோடி பயணங்களை மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தகட்டமாக...
அடுத்தகட்டமாக பர்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் என பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பிறகு, இணைப்பு திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ பணிகள் மேற்கொள்வதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அறிக்கைக்கு இதுவரை அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதால், இதற்கு ஒப்புதல் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலையம் வரும் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் மெட்ரோ பணிகள் முடிந்தவுடன் சிங்காரச் சென்னையின், பிரதான போக்குவரத்தாக மெட்ரோ இருக்கும் என்பதில் ஐயமில்லை, அதேபோல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பிறகு, சிங்கார சென்னையின் நாயகனாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விளங்கும் என்பதே கருத்தாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்