கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 


சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்பொழுது பொதுமக்கள் வந்து சேர்வதற்கு, பேருந்து மற்றும் தங்களுடைய சொந்த வாகனத்தில் வருவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. அருகே ரயில் நிலையங்கள் இல்லாததால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 


கிளாம்பாக்கம் ரயில் நிலையம்


இதனால் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 


வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், மூன்று நடைமுறைகள் அமைக்கப்பட உள்ளன.


நவீன வசதிகளுடன்


இந்த கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் அறை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், டிக்கெட் அலுவலகம், குடிநீர் வசதி, இருக்கை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே நடைமேடைகளில் சிறுசிறு கடைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


அதேபோன்று பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய ரயில் நிலையம் என்பதால் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து மின்சார ரயில்களும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று கூடுதலாக பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார் போல் 30 சதவீதம் வரை, கூடுதல் மின்சார ரயில்களை, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நடை மேம்பாலம்


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் " எக்ஸ்-லெட்டர் " வசதியுடன் கூடிய நடை மேம்பாலத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் எளிதாக கிளம்பாக்கம் பேரு நிலையத்தை அடைய முடியும். இப்பணிகள் முழுமை அடையும் பொழுது, சென்னை மையப் பகுதியில் இருக்கும் பயணிகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எளிதில் அடைய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமைவது மட்டுமில்லாமல், பயணிகளுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றன.