கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 
 
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்  ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.  சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 


திடீரென வந்த பிரச்சனை ( kilambakkam bus terminus water logging ) 
 இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திடீரென புதிய பிரச்சனை வரத் துவங்கியுள்ளது. அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறு மழைக்கு அதிகளவு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.



ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 


இந்த மழை நீரை வெளியேற்ற முறையான வடிகால், வசதி இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.   இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளம் மற்றும்  ஊடகங்களில் வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.  இதன் காரணமாக  தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது


 17 கோடி ரூபாயில் வடிகால் பணிகள் அமைக்க திட்டம்


இதனால் அப்பகுதியில் புதிய கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை 17 கோடி ரூபாயில்  செயல்பட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கால்வாய் அமைத்தால் மழை நீர் தேங்காமல்  நேரடியாக தண்ணீர் அடையாறு ஆற்றுப் படுகைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதேபோன்று, பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மழை நீர் சுமார் 180 அடி நீளம் உள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து, கிளாம்பாக்கம் ஏரி மற்றும் வண்டலூருக்கு ஏரி ஆகியவற்றுக்கு செல்லும் வழியில் மழை வடிநீர் தாழ்வாய் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.



ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 


 45 நாட்களுக்குள் முடிக்க திட்டம்


வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாகவே,  முக்கிய பணிகளை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.  இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை அனுமதி பெற்று 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. 



ABP Exclusive Photo : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( Kilambakkam Bus Terminus ) 


 துவங்கப்பட்ட பணிகள்


முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து, தற்பொழுது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முன் பகுதியில்  சென்னை -திருச்சி தேசிய பிரதான சாலை ஓட்டி மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.  முதலில் பெரிய அளவிலான கான்கிரீட் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.  அதிக அளவு மழை பெய்து தண்ணீர் தேங்கினாலும், அதன் குழாய் வழியாக வெளியேறும் வகையில் பணிகள் நடைபெற உள்ளன.  சுமார் மூன்று மீட்டர் அகலம்  அளவிற்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது.   சுமார் 30 நாட்களுக்குள்ளாக இந்த பணிகளை முடிக்க  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்