" கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நுழைவு வாயிலில்,  மீண்டும் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் "

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam bus terminus )

 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்  ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.  இப்பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.  சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் வரும் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இணைக்கும் வகையில் மெட்ரோ துவங்கப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

 

திடீரென வந்த பிரச்சனை ( Rain exposes chinks in Kilambakkam terminus )

 

இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திடீரென புதிய பிரச்சனை வரத் துவங்கியுள்ளது. அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறு மழைக்கு அதிகளவு மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்த மழை நீரை வெளியேற்ற முறையான வடிகால், வசதி இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதற்காக சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

மழை நீர் தேங்கி குளம் போல்

 

இந்தநிலையில்,  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில், மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். 

 

மீண்டும் மீண்டுமா

 

நேற்று நள்ளிரவு மீண்டும் தாம்பரம் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவு வாயிலில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதன் காரணமாக நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது புதிய பிரச்சினையாக மழைநீர் தேங்கி நிற்பது உருவெடுத்துள்ளது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக, தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளது.