நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை குறித்து கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ”நான் இப்போதுதான் சென்னைக்கு வந்தேன். நான் மெயின் ரோட்டில் வந்தவுடன், ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. முழு போக்குவரத்தும் மெயின் ரோட்டின் ஓரங்களில் நகர்ந்து, போக்குவரத்தை நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல வழி செய்தது. என்னை நம்புங்கள், இதை நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. எனது நகரம் மற்றும் அதன் மக்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ரொம்ப பெருமையா இருக்கு. நம்ம சென்னை. பெஸ்ட் சிட்டி இன் த வோர்ல்ட்” என பதிவிட்டுள்ளார். 


குஷ்புவின் இந்த பதிவிற்கு ட்விட்டர் வாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குஷ்புவின் இந்த பதிவிற்கு மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த எக்ஸ் தளப் பதிவை மட்டும் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு சென்னைக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நேற்று வந்துள்ளார். அப்போது இந்த நிகழ்வை பார்த்துள்ளார். அதிலும் குறிப்பாக இதை நேற்றுதான் அவர் முதல் முறையாக பார்த்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 






ஆனால் பொதுவாகவே சென்னையில் உள்ள அனைத்து சாலைகளுலும் குறிப்பாக மிகவும் பரபரப்பாக இயங்கும் அனைத்து சாலைகளிலும் ஆம்புலன்ஸ் வரும்போது வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்தியோ அல்லது சாலையில் எதாவது ஒரு ஓரத்தை நோக்கிச் சென்றோ ஆம்புலன்ஸ்க்கு வழி விடுவார்கள். அதே நேரத்தில் சாலையில் வாகனத்தை ஓரம்கட்ட இடம் அல்லது சூழல் இல்லாத நேரத்தில் ஆம்புலன்ஸ்க்கு கூடுமானவரை வழி ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி செய்வார்கள். நடிகை குஷ்பு இந்த நிகழ்வை இப்போதுதான் முதல்முறையாக பார்த்ததாக குறிப்பிடுகின்றார். அதேநேரத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பிரயாணப்படும் நடிகை குஷ்பு வெளிநாடுகளில் இதுபோன்ற காட்சியைப் பார்த்ததில்லை என தெரிவித்துவிட்டு, நமது சென்னை மக்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறியுள்ளதை வாகன ஓட்டிகளுக்கான பாராட்டாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


நடிகை குஷ்பு போன்றவர்கள் இது போன்ற நிகழ்வை தனது சமூக வலைதளப் பகுதிகளில் பகிர்வது பலரையும் இந்த நிகழ்வை கொண்டு சேர்க்கும் என்பதும் முக்கியமானது.