12 கிலோ வெள்ளி கவசம் ஒப்படைப்பு

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அருள்மிகு பெரியாண்டவருக்கு 12 கிலோ எடையில் உபயதாரர் ஆனந்தக்குமார்  வெள்ளிக் கவசத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு 12 கிலோ எடையிலான வெள்ளி கவசம் தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பு பகுதியில் உள்ள அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலுக்கு வழங்கினார்.

Continues below advertisement

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உபயதாரர்களின் பங்களிப்பு பெருமளவு திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் வழங்கப்படும் நிதிகள் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப திருக் கோவில்களுக்கு திருப்பணிக்கும் பயன்படுவதால் அதிக அளவு உபயதாரர்கள் திருக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தான் அதிகளவில் கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதுவரை 2350 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இன்னும் சில நாட்களில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடம் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு உபயதாரர்களால் வழங்கப்பட உள்ளது. இதுவரை 10,000 மேற்பட்ட கோயில்கள் திருப்பணிக்காக மாநில வல்லுநர் குழுவால் அனுமதிக்கப்பட்டுள்ளது. 33 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோவிலுக்கு 100 கிலோ வெள்ளியை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இந்து சமய அறநிலைத்துறையில் நடைபெற்ற சாதனைப் போல் வேறு எந்த ஆட்சி காலத்திலும் நடைபெறவில்லை. எட்டுக்கால் பாய்ச்சலில் அறநிலையத்துறை செயல்படுவதால் இறை பக்தர்கள் ஆட்சியை பாராட்டுகிறார்கள். இதுவரை 909 கோடி ரூபாய் உபயதாரர்கள் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

Continues below advertisement

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி

வருகிற திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள், உபயதாரர்கள், துறை பணியாளர்கள் உள்பட 6600 நபர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு கோயிலை சுற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள், உபயதாரர்கள், துறை பணியாளர்கள் உள்பட 11600 நபர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மலை மீது ஏற அனுமதி மறுப்பு

திருவண்ணாமலை மலையில் அதிக அளவில் மக்களை ஏற்றக்கூடாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத்திற்கு பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிடுவார். அறிக்கையின்படி மலையில் தீபம் ஏற்ற தேவையான அளவு மனிதர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ என தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் இரா சுகுமார் மற்றும் உபயதாரர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.