காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் திடீர் மழை பெய்தது. மழையின் காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் காய்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மேக மூட்டம் ஏற்பட்டு திடீரென மழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார் சத்தரம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.



சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், மறைமலைநகர், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டுகிறது. சென்னையை இருள் சூழ்ந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்கின்றன. சென்னையை கருமேகங்கள் சூழந்ததால் மாலை நேரமே இரவுபோல் இருள் கவிந்தது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ,மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் இரவு 8 மணிவரை விட்டு விட்டு மழை பெய்தது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 32 .6 மில்லி மீட்டர் மழை பெய்தது.



தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 9-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் , தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று நீலகிரி, கோயம்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்கள்‌, தென்‌ மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, சேலம்‌, ஈரோடு, கிருஷ்ணரி, வேலூர்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் நாளை வட உள்‌ மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்பத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாளை முதல்‌ 09 ஆம் தேதி வரை வட கடலோர மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்பத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌. அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌. இன்று முதல் வருகின்ற 9-ஆம் தேதி வரை வங்க கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.