சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தருமபுரி ஆட்சியராக மலர்விழி இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமிநாசினி கொள்முதலில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன. 


மேலும், பாப்புரெட்டியப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


யார் இந்த மலர்விழி ஐஏஎஸ்..? 


கடந்த 2001 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் - 1 தேர்வில் தேர்ச்சிபெற்ற மலர்விழி, கடந்த 2008ம் ஆண்டு சென்னையில் உள்ள வணிகவரித் துறையில் இணை ஆணையராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து, அவருக்கு ஐஏஎஸ் கேடர் வழங்கப்பட்டது. 


இதையடுத்து 2009 ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக மலர்விழி, விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலராக செயல்பட்டார். தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த மலர்விழி ஐ.ஏ.எஸ்., தற்போது சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.