தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு தடைவிதித்து அனைத்து திருக்கோயில்களும் மூடப்பட்டது.
தற்பொழுது கொரானா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்ததன் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவை அளவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ள காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களின் தரிசனத்திற்காக திருக்கோவில்களை திறக்க அனுமதித்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டம் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்றதும், அத்திவரதர் புகழ்பெற்றதும் வரதராஜ பெருமாள் திருக்கோவில்,சக்தி பீடங்களில் முதன்மையான காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோவில், 3000 ஆண்டுகள் பழமையான ஏகாம்பரநாதர் கோவில், கந்தபுராணம் அரங்கேறிய குமரக்கோட்டம் முருகன் கோவில், உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்உள்ள 600 கோவில்களில் இன்று காலை 6 மணி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில்கள் 6 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் முடித்து 7.30 மணி அளவில்தான் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது.
முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி பக்தர்களின் கைகளை கழுவ கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டு , உடல் வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கோவில் வளாகங்களில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. குங்குமம், விபூதியில் உள்ளிட்டவை தட்டுகளில் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.48 நாட்களுக்கு பிறகு திருக்கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.