காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் மற்றும் பால்நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால், வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டது. வீட்டுமனை பிரிவு பட்டா அமைக்கும் பொழுது, மக்களின் பொது பயன்பாட்டுக்கு  அரசுக்கு  நிலத்தை ஒதுக்க வேண்டும்.


 

 

அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலத்தை விஜிபி நிறுவனத்தின் சார்பாக அதன் பங்குதாரர் அமல்தாஸ் ராஜேஷ் என்பவர் மனை பிரிவுகளுக்கு உபயோகத்திற்காக, சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு, கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் சார்பாக அலுவலகத்தில் பதிவு செய்த வழங்கினார். இந்நிலையில்,  அந்த நிலங்களை வி.ஜி.எஸ் அமலதாஸ் ராஜேஷ் என்பவர் மோசடி செய்து விற்பனை செய்ததாக தெரியவந்தது. விஜிஎஸ்  அமலதாஸ் என்பவர் விஜிபி குழுமத்தினை சேர்ந்த வி.ஜி.சந்தோஷ் என்பவரின்  மகன் ஆவார்.



 

பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தினை (OSR) ரத்து செய்து அதற்கு உடனடியாக செயல்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் (தற்பொழுது இவர் இந்து சமய அறநிலைத்துறையில் பணியாற்றி வருகிறார் ) மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த சார் பதிவாளர் ராஜதுரை (காஞ்சிபுரம் இணை பதிவாளர்)  வட்டாட்சியர்கள் எழில் வளவன் ( நில எடுப்பு பிரிவு காஞ்சிபுரம்),  பார்த்தசாரதி ( தற்பொழுது ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர்)  மற்றும் உதவியாளர் பெனடின் ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

 



 

உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள், இதுபோல் அரசு நிலத்தை மோசடி செய்த செயல் அதிர்ச்சி அளித்துள்ளது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு ரூபாய் 30 கோடி என தெரிய வருகிறது. இதேபோல அதே பகுதியில் விஜிபி நகர் என்ற பெயரில் இதே போன்ற மோசடியில் ஈடுபட்ட அமல்தாஸ் ராஜேஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக தொடர்ந்து இந்த வழக்கில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பட்டா போட்டு பொதுமக்களுக்கு விற்ற வழக்கில்  30 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.