கடந்த 17-ஆம் தேதி பெரிய காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென முகக்கவசம், ஹெல்மெட் அணிந்துகொண்டு பட்டா கத்திகளுடன் நுழைந்த  கும்பல் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி  சேதப்படுத்தி விட்டு வாடிக்கையாளர்களையும், உரிமையாளரையும் மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர்.



 

மேலும் இதே மர்ம கும்பல் ராஜாஜி காய்கறி சந்தை அருகே உள்ள பெட்டிக் கடையிலும் தகராறு செய்து அடித்து நொறுக்கி விட்டு, காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில் மீன் ஏலம் எடுத்து உள்ளவர்களிடமும் அடிதடி செய்துவிட்டு இரண்டு பேரை காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டு வந்தனர்.



 

இந்நிலையில் பெட்டிக்கடை, தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மாமூல் கேட்டு மிரட்டி கடைகளை அடித்து உடைத்து நாசப்படுத்தி, பயமுறுத்திய, சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெமினி, ஜெகன், வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த அருண், தேனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் ஆகிய 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து உள்ளனர். போலீசார் சுற்றி வளைத்த போது தப்பி ஓட முயன்ற நிலையில் தவறி விழுந்து காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போட்டுள்ளனர்.



 

மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று நான்கு பேரையும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு, காஞ்சிபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.



 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கில் இலவசமாக பெட்ரோல் போட சொல்லி ரகளை செய்த ஐந்து நபர்களை 24 மணி நேரத்தில் காவல் துறையினர்  கைது செய்திருந்தனர். காஞ்சிபுரத்தில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல், சற்று அமைதியான சூழல் நிலவி வரும் நிலையில் மீண்டும் இதுபோன்ற சிறுசிறு சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இனி குற்றச் செயல்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.