நூற்றாண்டு மார்க்கெட்
காஞ்சிபுரத்தில் உள்ள ராஜாஜி காய்கறி மார்க்கெட், ஆங்கிலேயர் காலத்தில், 1907ம் ஆண்டு கட்டப்பட்டது. இதனை அடுத்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மார்க்கெட்டை 1933ல் கிழக்கு பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து 1945ல் மேற்கு பகுதி என நுழைவு ஏற்படுத்தி, விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்பொழுது நிலவரப்படி காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் 350 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டிற்கு உள்ளூர் விவசாயிகள் மூலம் மற்றும் சென்னை கோயம்பேடு, மற்றும் வெளி மாநிலங்களில் காய்கறி வருகிறது. தினமும் காஞ்சிபுரம் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் கடை வியாபாரிகள், மார்க்கெட்டில் காய்கறி வாங்கி செல்கின்றனர். சிமெண்ட் கூரை மற்றும் ஓடுகளாலான மார்க்கெட் என்பதால், மழைக்காலத்தில் தண்ணீர் உள்ளே தேங்கி நின்று காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
பழுதடைந்த மார்க்கெட்
நுாற்றாண்டை கடந்து செயல்படும் இந்த மார்க்கெட்டை, மக்கள்தொகை அதிகரிப்புக்கு தகுந்தவாறு புதுப்பிக்க வேண்டுமெனவும் சிமெண்ட் கட்டடம் கட்ட வேண்டும் எனவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பல ஆண்டுகால கோரிக்கைக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், அதற்கு ஒரு வழியாக விடிவு கிட்டி புதிதாக கட்டமைக்க 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
பூமி பூஜை போடப்பட்டது
இதற்கான டெண்டர் விடப்பட்டு பூமி பூஜையும் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிலையில் கட்டிட பணியானது துவங்ப்படவுள்ளது. இதற்காக இரயில்வே சாலையில் உள்ள பழம்பெரும் ராஜாஜி சந்தையை காலி செய்து மாநகராட்சி நிர்வாகத்தால், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் டிப்போ எதிரே தற்காலிகமாக சந்தைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 250க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து காய்கறி மார்க்கெட் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
31 ஆம் தேதி முதல் தற்காலிக மார்க்கெட்
இந்த நிலையில் இம்மாதம் 31ம் தேதி முதல் தற்காலிக மார்க்கெட் செயல்பட துவங்கும் என ராஜாஜி மார்க்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை அப்பகுதியில் தற்காலிகமாக செயல்படும் என தெரிவித்திருக்கின்றனர். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டை, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், தேனம்பாக்கம் சங்கர், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்