தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தும் திட்டங்கள் சரிவர செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அடி பம்ப் அகற்றப்படாமல், சாலை அமைக்கப்பட்டது, தாம்பரத்தில் மின் கம்பம் அகற்றப்படாமல் சாலை அமைக்கப்பட்டது, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாமல் குழாய் அமைத்தது உள்ளிட்ட பணிகள் விமர்சனத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட், திட்ட அலுவலகத்தில் ஒரே அறையில் இரண்டு கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.



 

தொடரும் சர்ச்சை..

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில்  சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில், திட்ட இயக்குனர் அலுவலகம் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை இருந்து வந்த நிலையில் , கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூபாய் 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.



 

முதலமைச்சர் திறந்து வைத்த கட்டிடம்

 

இந்த புதிய கட்டிடத்தை  தமிழக முதல்வர்  நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில்,  நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகையுடன்  சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, பொறியாளர் கார்த்திக்  மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து அலுவலர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.



 

ஆனால் புதிதாக கட்டப்பட்ட இந்த திட்ட அலுவலகத்தில் உள்ள கழிவறையில் ஒரே அறையில் இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பொறியாளருக்கு தெரியுமா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் நேரடியாக துவங்கி வைக்கும், திட்டத்தில் கூட அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் .



 

அதிகாரிகள் விளக்கம்

 

இதுகுறித்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா நம்மிடம் கூறுகையில், “பணிகள் இன்னும் முழுமையாக நடைபெற்று முடியவில்லை, இரண்டு கழிப்பறைக்கு நடுவில் மறைப்பு அமைக்கப்படும்” என தெரிவித்தார்.