சென்னை அண்ணாநகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள ஆவின் பூத் அருகில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது 2 மகள்களுடன் கடந்த 10ம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முன்னாள் ராணுவ வீரரின் 22 வயதுடைய 2வது மகள் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வாலிபர் ஒருவர், தனியாக நடந்து சென்ற இளம் பெண்ணை பார்த்ததும் மெதுவாக தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டியபடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் சத்தம் போட, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர், அதை கண்ட மர்ம வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கில் சென்றுவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது தந்தையுடன் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி உதவி கமிஷனர் அக்ஸ்டின் பால்சுதாகர் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தார். தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது அதிர்ச்சி தரும் பல காட்சிகள் பதிவாகி இருந்தன.
கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இதேபோல தனியாக நடந்து சென்ற பெண்ணை பாலியல் ரீதியாக ஒரு மர்ம வாலிபர் துன்புறுத்தியதாக ஒருவர் புகார் ஏற்கனவே இருந்தது தெரியவந்தது. இது குறித்து அண்ணாநகரில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரின் புகைப்படத்தை கீழ்ப்பாக்கத்தில் பாதித்த பெண்ணிடம் காட்டியபோது அந்த பெண்ணும் அந்த நபர்தான் என்பதை உறுதி செய்தார். உடனே இரண்டு இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளில் உள்ள பைக் பதிவு எண்களை வைத்து தேடிய போது, அந்த நபர் சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாத நகரை சேர்ந்த 19 வயதாகும் தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர், சென்னையில் தனியாக அதிகாலை மற்றும் நள்ளிரவில் செல்லும் பெண்களிடம் கத்தி முனையில் பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது. வசதியான குடும்பத்தை சேர்ந்த தினேஷ்குமார் தலைநகர் டெல்லியில் பிரபல கல்லூரி ஒன்றில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வருகிறார். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்பு நடந்து வருகிறது. அதேநேரம், தினேஷ்குமார் எழும்பூரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பயிற்சி பெற்று வருகிறார்.
தனிப்படை போலீசார் தினேஷ்குமாரை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பல இளம் பெண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் ஆன்லைன் மூலம் தாங்களும் இதே நபர் மூலம் பாதிக்கப்பட்டோம் என்று புகார்கள் அளித்து வருகின்றனர். இது குறித்து தனிப்படை போலீசார், "எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பயிற்சி ஊழியராக வேலை செய்து வரும் தினேஷ்குமார், அதிகாலை 4 மணிக்கு ஓட்டலுக்கு பணிக்கு செல்லும் போதும், அதேபோல் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பணி முடிந்து செல்லும் போதும் வில்லிவாக்கத்தில் இருந்து அண்ணாநகர் வழியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகள் மற்றும் குறுகிய சாலைகளை தான் பயன்படுத்தி எழும்பூருக்கு பணிக்கு செல்கிறார். அதிகாலை பணிக்கு செல்லும் இளம் பெணகள் மற்றும் நள்ளிரவில் பணிமுடிந்து பேருந்து இல்லாமல் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து உதவி செய்வது போல் நடித்து தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனது பைக் பழுதடைந்துவிட்டதாக கூறி கத்தி முனையில் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். அவன் அளித்த வாக்குமூலத்தின் படி 80க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.