அரசு தலைமை செவிலியர்


காஞ்சிபுரம் அடுத்த  கம்மவார்பாளையத்தை சேர்ந்தவர் விஜயநிர்மலா.  இவர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். இவர் தினமும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மூலம்  பணிக்கு சென்று வருவது வழக்கம்.  இந்நிலையில் விஜய நிர்மலா கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 8 மணிக்கு பணி முடித்து கம்மவார்பாளையம் செல்ல காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.


 "மறு உயிர்ப்பு சிகிச்சை " 


அப்போது பேருந்து நிலையத்தில் நின்ற காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஓட்டுனரான ராஜேந்திரன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பேருந்து நிலையத்தில் ராஜேந்திரன் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை  ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில், உடலில் ரத்த ஓட்டம் இல்லாமல் சுயநினைவு இன்றி ராஜேந்திரன் கிடந்துள்ளார். இதை பார்த்த செவிலியர் விஜயநிர்மலா சற்றும் தாமதிக்காமல், எந்தவித மருத்துவ உபகரணங்களும் இன்றி, இருதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை முறையை கையாண்டார். ராஜேந்திரனுக்கு சுயநினைவு திரும்பியது.


இதையடுத்து, 108  ஆம்புலன்ஸ் மூலம் மீட்க பட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செவிலியரின் முதலுதவியால், மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ராஜேந்திரன் உயிர் பெற்றது பல தரப்பினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இத்தகவல் அறிந்தவர்கள் செவிலியரை பாராட்டி வருகின்றனர்.


இதுகுறித்து விஜய நிர்மலா கூறியதாவது: பேருந்திற்காக காத்திருந்த போது  கண்முன்னே ஒரு முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில், அவரின் நாடித் துடிப்பு நின்று விட்டது. சற்றும் யோசிக்காமல், சி.பி. ஆர் எனும் இருதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சைக்கு முயற்சி செய்தேன். எந்த வித அசைவும் இல்லை. இரண்டாவது முறை முயற்சி செய்தேன். அப்போது அவர் கண் விழித்தார். அவருக்கு செயற்கை காற்றோட்டத்தை அளித்தேன். அவர் சுய நினைவுக்கு திரும்பிய பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்" என தெரிவித்தார். 


இந்தநிலையில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.  எழிலரசன் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரடியாக சென்று செவிலியரை சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தார். மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் ஒவ்வொருவரும் இது போன்று அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார். செவிலியரை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, , RMO பாஸ்கர், மருத்துவமனை அலுவலர்கள் உடனிருந்தனர்.