காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள பேருந்து நிலையம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதுள்ள மக்கள் தொகை வாகன வசதிக்கு அவை பொறுத்தமாக இருந்தது. ஆனால் தற்பொழுது காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்த நிலையில் மக்கள் அடர்த்தி அதிகரித்துள்ளது. இதனை அடுத்து காஞ்சிபுரத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிதியாக 38 கோடி ரூபாய் ஒதுக்கியது. இருப்பினும் இன்னும் புதிய பேருந்து நிலையத்திற்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறியாக உள்ளது.
இந்த நிலையில்,காஞ்சிபுரம் மாநகராட்சியில் கூட்ட நெரிசலை குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இரண்டு இடத்தை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு மற்றும் வெள்ளைகேட் ஆகிய பகுதியில் உத்தேச புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வினை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட பின்பு அமைச்சர் பேசுகையில்,
காஞ்சிபுரம் நகரத்தில் பெருகி மக்கள்தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை சரி செய்திட புதிய பேருந்து நிலையத்தை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்தினை செயல்படுத்திட ஆவணம் செய்யப்படும், மேலும் சட்டப்பேரவையில் மதிப்பிற்க்குரிய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோரிக்கைக்கிணங்க, வெள்ளைகேட் மற்றும் சித்தேரிமேடு ஆகிய பகுதிகளில் உத்தேச பேருந்து நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அவர்களை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்