காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கூரம் ஊராட்சியில் உள்ள மணல்மேடு பகுதியில் வசிக்கும்  பழங்குடியின இருளர் இன மக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவற்றில் கடந்த 2016-17-ஆம் ஆண்டு ரூ.1.79 லட்சத்தில் தமிழ்நாடு அரசு பசுமை வீடு திட்டத்தின் மூலம் 12 நபர்களுக்கு வீடு வழங்கி கட்டித்தர ஒப்பந்தம் போடப்பட்டது.




இவற்றை பயணாளிகளின் வங்கி கணக்கிலேயே பணம் செலுத்தப்பட்டு ,வீடு கட்டப்பட்ட நிலையில் ஒப்பந்ததாரர் பாதியிலேயே கட்டுமான பணியை முடித்து கொண்டு முழு பணத்தையும் பெற்று சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்டப்பட கட்டிடங்கள் தரமற்ற நிலையில் மழைகாலங்களில் தங்க புதிய வீட்டிற்கு சென்றதால், வெளியே பெய்வதை விட மாடி வீட்டினில் அதிக மழை பெய்வதாக வருத்தத்துடன் தெரிவித்தனர்.




மேலும் அதே பகுதியில் மீதமுள்ள பழங்குடியினருக்கு 15 நபருக்கு 2020-21ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பசுமை வீடு திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்ட ஒப்பந்ததாரர் நியமிக்க பட்டு  கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வீடு முழுவதும் அமைக்கப்பட்டும், மின்சார துறையினால் இன்று வரையில் மின்னினைப்பு தரப்படாமலேயே அலக்கழிப்பதாக அப்பகுதி பழங்குடியின மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


மேலும் பழங்குடியினர் பகுதியில் +2 பொதுத்தேர்வு 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாண்டு தேர்வு எழுதுவதாகவும் அவர்களுக்கு மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் ராந்தல் விளக்கு மற்றும் பேட்டரி விளக்கு ஒளியில் படிக்கும் அவல நிலை உள்ளதாகவும், இப்பகுதியில் 1முதல் 10 வகுப்பு வரை 20 மேற்பட்ட மாணவர்கள் படிப்பதாகவும் அவர்கள் பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி இல்லை எனவும் தெரிவித்தனர். மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை எனும் நிலை இருந்தாலும், பழங்குடியின மக்கள் வசிக்கும் இடத்தில் மின்சாரம் இல்லாமல் இருப்பது 2023 ஆம் ஆண்டிலும் தொடருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.




இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி வள்ளியம்மாள் கூறுகையில், நாங்கள் வாழ்வதே இருட்டில்தான். சமீபத்தில் பிரசவமான கைக்குழந்தை கூட இருட்டில்தான் வைத்து வாழ்கிறோம். அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் அடிக்கடி அரசு அதிகாரிகள் வருகிறார்கள் ஆனால் எதுவும் செய்யவில்லை நாங்கள் கையெழுத்து கும்பிடுகிறோம். எங்களை சிலர் கேலி செய்கிறார்கள் அதை போக்குவதற்காக ஒரு விடை கொடுக்க வேண்டும் என கூறுகிறார் வள்ளியம்மாள்.




இது குறித்து மக்கள் மன்ற நிர்வாகி மகா கூறுகையில்,  36 குடும்பமாக வசித்து வருகின்றனர் அடிப்படை வசதிகளும் இங்கே இல்லை. மாணவர்கள் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் வீட்டிற்கு வந்து படிக்க முடியவில்லை இந்த இடம் பார்ப்பதற்கு காடு மாதிரி உள்ளது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் 


தமிழக அரசு ஏழை எளியவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என தெரிவித்தும் பழங்குடியின இருளர் இன மக்களுக்கு மின்சார பயன்பாடு அரிதான ஒன்றாகவே இந்நூற்றாண்டிலும் தொடர்வது சமூக ஆர்வலர்கள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். இனிமேலாவது பழங்குடியின இருளர் இன மக்களுக்கு தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் நம்பிக்கையாகவும், தரமாகவும் அவர்கள் பயன்படுத்தும் வகையில் சிறந்த முறையில் கொண்டு செல்ல அரசு அதிகாரிகள், அலுவலர்களுக்கும் முன் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.