காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் 5000- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரும் நிலையில்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஊராட்சி மன்ற தலைவராக தமிழ் அமுதன் என்பவர் செயல்பட்டு வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதன், ஊராட்சி மன்ற நிர்வாகத்தை செயல்படுத்தி வந்த நிலையில், உள்ளாட்சி சட்ட விதிகளை மீறி நிதி  தவறாக கையாண்டு உள்ளார்  என்ற குற்றச்சாட்டின் பேரில், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார். சுமார் ஊராட்சி கணக்கிலிருந்து 68 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய், செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



 

ஊராட்சி மன்ற கிராம மக்களுக்கு தேவையான அன்றாட நடவடிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவர் கவனிக்க முடியாத காரணத்தால் கிராம மக்கள் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருவதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். இதனால் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நேரில் வந்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரப் பறிப்பை, திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் வழங்கினார்கள்.



 

கிராம மக்களின் மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உறுதி அளித்ததின் பேரில் ஆதனூர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருகை புரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து ஓர் இடத்தில் அமர வைத்து, பொதுமக்கள் பிரதிநிதியாக சிலரை மற்றும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க காவல்துறையினர் அனுமதித்தினர்.