காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் போதைப் பொருளான கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கண்காணிக்கும் பணியை மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
புஞ்சை அரசன் தாங்கள் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு உயர்ரக பைக்குகளில் வந்தவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் புஞ்சை அரசன் தாங்கல் பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அம்ஜத் அகமது , டிப்ளமோ கல்லூரியில் படிக்கும் குகன், அஸ்வின் குமார், மற்றும் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜவகர் உள்ளிட்ட நான்கு பேரும் ராணிப்பேட்டை பகுதியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 57 பொட்டலங்கள் கொண்ட ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த 18லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக இரு பைக்குகளையும் பறி முதல் செய்தனர். விஜய் நடித்த மாஸ்டர் பட பாணியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, 3 சிறுவர்களை கூர்நோக்கு பள்ளிக்கும், ஓரு இளைஞரை சிறைச்சாலைக்கும் அனுப்பி வைத்தனர். கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகள், சிறுவர்களுக்கு தண்டனை குறைவு என்பதை பயன்படுத்திக் கொண்டு,பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வைத்து போதைப் பொருளான கஞ்சா கடத்தி விற்பனை செய்வது காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்