செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமப்பகுதியில் ஈசிஆர் சாலையையொட்டி உள்ள முந்திரிதோப்பில் வசித்து வந்தவர் சகாதேவன்(92). இவரது மனைவி ஜானகியம்மாள் (82). இத்தம்பதியருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், பிள்ளைகள் அனைவரும் திருணமாகி அருகில் உள்ள ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், தம்பதியர் மட்டும் முந்திரி தோப்பில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

 



 

இவர்களை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பிள்ளைகள் வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம் என தெரிகிறது. இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டுக்கு வந்த மகன் பெற்றோரை காணவில்லை என தேடி உள்ளார். வீட்டிற்கு இடது புறத்தில் சகாதேவன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தெரிந்தது. மேலும், தாயாரை காணவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், மாமல்லபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், சகாதேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 



 

இதையடுத்து, காணாமல்போனதாக கூறப்பட்ட தாயாரை மகன்கள் முந்திரிதோப்பில் தேடியுள்ளனர். அப்போது, இன்று காலை ஒருபுதரின் அருகே ஜானகி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இருப்பது தெரிந்தது. மேலும், அவரது உடலில் இருந்த சுமார் 5 பவுன் தங்கநகைகள் மாயமாகியிருப்பது தெரிந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தை மாமல்லபுரம் டிஎஸ்பி.ஜகதீஸ்வரன் பார்வையிட்டார். பின்னர், போலீஸார் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர். மேலும், உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தனியாக இருந்த வயது முதிர்ந்த தம்பதியரை நகைக்காக மர்மநபர்கள் கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.