காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் ,6.99 ஹெக்டேரில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட 33 பிளாக்குகளுடன் கூடிய 2112 குடியிருப்புகள் மற்றும் அடிப்படை மேம்பாட்டு வசதிகளான அங்கன்வாடி மையம், ஆரம்ப பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் அங்காடி, நியாய விலை கடை, கடைகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ரூ. 190.08 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.


 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேகவதி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் பொது மக்கள், பெரு வெள்ளக் காலங்களில் வெள்ள நீர்  வீட்டுக்குள் புகுந்து அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைவதை தடுக்கும் வகையில் அங்கு வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை  அகற்றி கீழ்கதிர்பூரில் கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


 

இக்குடியிருப்பில்  உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 400 சதுர அடி கொண்டது. இதில்  மத்திய அரசு ரூ 1.5 லட்சமும், மாநில அரசு ரூ.6 லட்சமும் மான்மயமாகவும், பயனாளிகள் ரூ 1.5 லட்சம் என மொத்தம் 9 லட்சம் மதிப்பில் ஒவ்வொரு வீடும் பயனாளிக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. மாற்று இடமாக கட்டப்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அளிக்கப்படாமல் உள்ளதாக ABPNADU இணையதளத்தில் செய்தியாக பதிவு செய்திருந்தோம்.

 


 

இந்நிலையில்  இன்றைய தினம் தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இக்குடியிருப்புகளை, திறந்து வைத்து முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அவர்களுக்கான  வீடு ஒதுக்கீடு ஆணையினை  வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவேகவதி ஆற்றங்கரையுல் குடியிருந்த 1406 பயனாளிகள் மற்றும் பொருளாதரத்தில் பின்தங்கியவர்களாக  தேர்வு செய்யப்பட்ட 706 பயனாளிகள் என 2112 பயனாளிகளில் முதற்கட்டமாக பயனாளிகள் பங்களிப்பு தொகையை செலுத்தியவர்களுக்கு இன்றைய தினம் வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமள்ளவர்கள் பயனாளி பங்களிப்பு தொகை செலுத்தியப்பின் அடுத்தக்கட்டமாக அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன்,மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை மனோகரன்,துனை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள்,பயனாளிகள் என  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.