கேஸ் சிலிண்டர் விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமாரின் மனைவி சாந்தி என்பவர் கேஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். அஜய்குமார் தம்பி ஜீவானந்தத்தின் வீட்டின் அருகே உள்ள கிடங்கில் சிலிண்டர்கள் இருப்பு வைக்கபட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இங்கு பெரிய சிலிண்டர்களில் இருந்து சிறிய சிலிண்டர்களுக்கு கேஸ் முறையான அனுமதியின்றி கேஸ் நிரப்பும் வேலையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
12 பேர் தீவிர சிகிச்சை..
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய சிலிண்டர் ஒன்று தவறி கீழே விழுந்து வெடித்தது. இதில், அருகில் இருந்த மற்ற சிலிண்டர்களுக்கும் தீ பரவியது. இதில் காஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், அவருடைய மகள்கள் நிவேதா, சந்தியா, பூஜா மற்றும் வடமாநில ஊழியர்கள் உள்ளிட்ட 12 பேர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 80 முதல் 90 சதவீதத்துக்கு மேல் படுகாயம் அடைந்த ஜீவானந்தம், சந்தியா, பூஜா, அருண், குணா ஆகிய 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், 30 முதல் 50 சதவீத காயம்பட்ட 7 பேரும் சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் தீவிபத்தில் காயமடைந்த வடமாநிலத்தை சேர்ந்த அமோத்குமார், மற்றும் ஜீவானந்தம், அவரின் மகள் சந்தியா ஆகியோர் சிகிச்கை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த குணால், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுராநல்லூர் பகுதியை சேர்ந்த கிஷோர், சண்முகப்பிரியன், கோகுல்,அருண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கேஸ் குடோன் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
5 பேர் மீது வழக்கு பதிவு
இந்த விபத்து தொடர்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய், அவருடைய மனைவி சாந்தி தம்பிகள் ஜீவானந்தம், பொன்னிவளவன், மேலாளர் மோகன்ராஜ் ஆகிய ஐந்து பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜீவானந்தம் உயிரிழந்துள்ளார். தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் மற்றும் கேஸ் குடோன் மேலாளர் மோகன்ராஜ் என இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களின் பட்டியல்..
1. ஜீவானந்தம்
2. பூஜா
3. கிஷோர்
4 .அமோத்குமார்
5. குணால்
6. கோகுல்
7. சண்முகப்பிரியன்
8. அருண்
9. தமிழரசன்
சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்..
1. நிவேதா (21) (60% தீக்காயம்) - வாலாஜபாத்.
2. சக்திவேல் (32) (40 % தீக்காயம்) - பண்ருட்டி.
3. பூஜா (21) ( 80 சதவீத தீக்காயம் ) வாலாஜாபாத்
ஆகிய 3 நபர்களுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.