காஞ்சிபுரம் மாநகராட்சியில் சிசிடிவி கேமரா, பொதுமக்கள் அறிந்து கொள்ள புராதான சின்னங்கள் ஓவியம் வரைந்து, திருவள்ளுவரின் ஓவியம் என அனைத்து அடிப்படை வசதியுடன் முன்மாதிரியான புது பொலிவுடன் புதிய நியாயவிலை கடையை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு, கணேஷ் நகரில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹15.78 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
இந்த புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், நியாய விலை கடை முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வழி பாதை, மழைநீர் சேகரிப்பு, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்களுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்மாதிரி நியாய விலை கடையாக கட்டப்பட்டுள்ளதாக மாமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் அறிந்து கொள்ள புராதான சின்னங்கள் வரையப்பட்ட வண்ண வண்ண சுவர்கள், திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்ட முகப்பு சுவர் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் SKP சீனிவாசன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.