சென்னை பூக்கடை காவல் நிலையத்துக்கு ‘ஐஎஸ்ஓ’ தரச்சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இந்த சான்றிதழைப் பெரும் 10வது காவல் நிலையம் ஆகிறது.


ஐஎஸ்ஒ தரச்சான்று


சட்டங்களை அமல்படுத்துதல், தடுத்தல், குற்றங்களை கண்டறிதல் மற்றும் விசாரணை செய்தல், சட்டம் ஒழுங்கை பராமரித்தல், அமைதியை நிலைநாட்டுதல், அவசரநிலைகளுக்கு பதிலளித்தல் மற்றும் பல சேவைகளை வழங்குதல் போன்றவற்றிற்காக இந்த ஐஎஸ்ஒ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பூக்கடை காவல் நிலையத்துக்கு இந்திய தர கவுன்சில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக சா்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழான மிகவும் மதிப்புமிக்க ISO 9001:2015 சான்றிதழ் பூக்கடை காவல் நிலையத்திற்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், ப்ரம்மதேசம், வளவனூர் ஆகிய காவல்நிலையங்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



சிசிடிவி - சோலார் மின்சாரம்


இந்த காவல் நிலையம் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களின் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு கூறுகளின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர் என்று செய்தி வெளியீடு குறிப்பிடுகிறது. பாதுகாப்பான சூழலை உருவாக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கக்கூடிய சோலார் மின்சக்தி கட்டமைப்பு அமைக்கப்பட்டு, மின்சாரம் தயாா் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..! மீண்டும் கனமழைக்கு தயாராகும் தமிழகம்! எப்போது தெரியுமா?


பொதுமக்களுக்கு பாதுகாப்பு


ஸ்டேஷனில் ஒரு வரவேற்பு அறை மற்றும் காத்திருப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், பொதுமக்களுக்கு தகவல் வழங்க எல்இடி பலகை நிறுவப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாகவும், காத்திருக்க உகந்ததாகவும் கட்டிடத்தின் உட்புற வேலைகள் செய்யப்பட்டுள்ளன. நிலையப் பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. QCI GOI (இந்திய தர கவுன்சில் -இந்திய அரசு) மூலம் ISO சான்றிதழைப் பெற்ற மாநிலத்தின் 10வது காவல் நிலையம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






விழாவில் கலந்துகொண்டவர்கள்


ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கும் விழா பூக்கடை காவல் நிலையத்தில் நேற்று (நவம்பர் 16) நடைபெற்றது. சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் இந்த விழாவுக்கு தலைமை வகித்தாா். வடக்கு கூடுதல் ஆணையா் டி.எஸ்.அன்பு, இணை ஆணையா் ஆா்.வி.ரம்யா பாரதி ஆகியோா் முன்னிலை வகித்த இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இந்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு பங்கேற்றாா். ஐஎஸ்ஓ தரச் சான்றிதழை ‘கொயஸ்ட்‘ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.காா்த்திகேயனிடமிருந்து அமைச்சா் சேகா்பாபு, காவல் ஆணையா் சங்கா் ஜெய்வால் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயா் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.