கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஏராளமான பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. அவற்றின் முக்கிய கோவிலாக பெரிய காஞ்சிபுரம் பகுதியில், அமைந்துள்ள ஏகாம்பரநாதர் கோவில் விளங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை புரிந்து சிவனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் இரண்டாம் பிரகாரம் அக்னி மூலையில் செயல்பட்டு வரும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதம் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு வாட்ஸ் அப் மூலம் பக்தர் ஒருவர், புகார்  தெரிவித்து இருந்தார்.

 



 

கரப்பான் பூச்சிகளும், புறாக்களும்

 

ஆன்லைன் மூலமாக பக்தர் ஒருவர் அளித்திருந்த புகாரில், மடப்பலையில் சமையல் செய்யும் நபர் மது அருந்திவிட்டு சமையல் செய்வதாகும் இதனால் நிதானம் இன்றி அவர், சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. சமையல் செய்ய இடத்தில் கரப்பான் பூச்சிகள், புறாக்கள், பூனை உள்ளிட்டவை வந்து செல்வதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் உணவு மற்றும் பிரசாதம் அருந்து வருபவர்கள் கடும் அவதரிக்குள்ளாவதாகவும், சமீபத்தில் அந்த உணவை சாப்பிட்ட எனக்கும் , உடல் நல குறைவு ஏற்பட்டதாகவும் அந்த பக்தர் புகார் தெரிவித்து இருந்தார்.

 

உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு

 

புகார் வந்தவுடன் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.. ஏகாம்நாதர் கோவில் செயல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பது தெரியவந்தது. கரப்பான் பூச்சி இருந்ததையும், புறாக்கள் அந்த பகுதியில் வந்து செல்வதையும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் காலாவதி ஆனதையும் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து, இது குறித்து கோவில் செயல் அலுவலரிடம், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உடனடியாக இவற்றை சரி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.



 

மீண்டும் ஆய்வு மேற்கொள்வோம்

 

இதுகுறித்து காஞ்சிபுரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, வாட்ஸ்ஆப் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம், செயல் அலுவலர் சம்பந்தப்பட்ட சமையல் செய்யும் நபரை மாற்றி விடுவதாக உறுதி அளித்தார். அதேபோல் கோவில் வளாகத்திற்குள் பிரசாதம் விற்பனை செய்து வந்த கடையையும் ஆய்வு மேற்கொண்டு, ஒரு சில பிரச்சனைகள் இருந்தது அவற்றை சரி செய்வதாக உத்தரவாதம் அளித்திருந்தனர். அதேபோல் சரி செய்து மாலை அவர்கள் புகைப்படமும் எடுத்து அனுப்பி இருந்தனர். இந்த வாரம் மீண்டும் ஆய்வுக்கு செல்ல உள்ளோம் என தெரிவித்தனர்.

 

தொலைபேசி எடுக்காத செயல் அலுவலர்

 

இதுகுறித்து கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் பெற ஏ.பி.பி நாடு சார்பில், பலமுறை தொலைபேசி மூலம் முயற்சி செய்தும் தொலைபேசி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.