காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிமணிய சுவாமி கோயிலுக்கு 2 கோடி மதிப்பிலான இரண்டடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டிடத்தை முருகபக்தர் ஒருவர் இந்து சமய  அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் காணிக்கையாக  வழங்கினார். காஞ்சிபுரம் முனுசாமி முதலியார் அவின்யூவில்  வசித்து வருபவர் மு.வேலாயுதம் (85) காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு அவர் வசிக்கும் முனுசாமி முதலியார் அவின்யூவில்  2,860 சதுர அடி பரப்பளவு கொண்ட 2 அடுக்கு மாடிக் குடியிருப்புக்குரிய சுய சம்பாத்திய கட்டிடம் உள்ளது. இதன் மதிப்பு 2 கோடியாகும். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூவருமே அரசுத்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.



 

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முதல் மகன்  மதம் மாறி காதல் திருமணம் கொண்டனர். இவரை தொடர்ந்து இரு மகள்களும், இதேபோல் மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் மூவரையும் பிரிந்து வீட்டில் தனிமையில் வாழும் வேலாயுதம் பிள்ளைகள் மீது கோபத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த  இடத்தை தனது குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு காணிக்கையாக கொடுப்பதாக பத்திரப்பதிவு செய்து அப்பத்திரத்தை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குமரன் கலையரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் வழங்கினார்.



 

இந்நிகழ்விற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பொன். ஜெயராமன் வரவேற்று பேசினார். 2 கோடி மதிப்பிலான சொத்தை தானமாக வழங்கிய மு.வேலாயுதத்துக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு சால்வையும், மாலையும் அணிவித்து கௌரிவித்ததுடன் நன்றியும் தெரிவித்தார். நிறைவாக குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்  செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் நன்றி கூறினார்.

 

முன்னதாக காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஏகாம்பரநாதர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோவிலிலும் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


 


Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )


 


Calculate The Age Through Age Calculator