காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காஞ்சிபுரம் - உத்திரமேரூர் செல்லக்கூடிய சாலையில் ஓரிக்கை பகுதியில் நீர்வரத்து கால்வாய் பகுதியில்  விஜயன் என்பவர் பல ஆண்டு காலமாக மாட்டு இறைச்சி கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியிலுள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், அக்கடை நீர்வரத்து கால்வாயினை ஆக்கிரமித்து , இயங்கி வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.



 

இந்த நிலையில் அந்த மாட்டு இறைச்சி கடையினை எடுக்க சம்பந்தப்பட்ட அக்கடையின் உரிமையாளர் விஜயனுக்கு, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு கடையினை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயன்றும் தோல்வியையே தழுவியது. இந்த நிலையில் இன்று அந்த ஆக்கிரமிப்பு கடையினை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையின் பாதுகாப்புடன் சென்றிருந்த நிலையில், விஜயனின் தாய்மாவான 47-வது வார்டு கவுன்சிலர் பிரேம் மற்றும் அப்பகுதியின் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற கவுன்சிலரும், பாஜக-வின் மாவட்ட துணை செயலாளருமான கயல்விழி சூசையப்பர் ஆகியோர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து, அக்கடையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 



 

மேலும் அதிகாரிகளுடன் மட்டுமின்றி காவல்துறையினரிடமும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடையினை அகற்ற முறையாக நோட்டீஸ் வழங்காதது ஏன்? என கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனையெடுத்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு கடையினை அகற்ற முடிவெடுத்து மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் திரும்பி சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் செல்லக்கூடிய அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.