இந்த நிலையில், வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11-ந் தேதி அதிகனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இதனால், சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளில் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அதிகனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அளவு குடிநீர், அத்தியவாசிய பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை போதியளவில் இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் தேவைகளுக்காக மீட்பு பணிகளுக்கும். அவசர கால தேவைகளுக்கும் 41 படகுகள் தயார்நிலையில் உள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சனிக்கிழமை இரவு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பெய்த கனமழையால் சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு, அன்றைய தினம் பெய்த மழைதான் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் பதிவான அதிகளவு மழைப்பொழிவு ஆகும்.
அந்த மழை காரணமாக, சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி, பாரிமுனை, புரசைவாக்கம், வியாசர்பாடி, ராயபுரம், ராயப்பேட்டை என்று பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல ஓடி வருகிறது. சாலைகளில் மட்டுமின்றி பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
பல பகுதிகளில் சாலைகளில் குளம்போல தேங்கிய மழைநீர் இதுவரை வடியவில்லை. இந்த மழைநீரை அகற்ற மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். சென்னையில் உள்ள நிவாரண முகாம்களில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒருசில இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. நாளை பெய்ய உள்ள அதிகனமழையை எதிர்கொள்வதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்