காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை பல்வேறு இடங்களில், 4 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் வழிப்பறியில் பட்டாக்கத்தியுடன் ஈடுபட்டு, பணம் கொடுக்க மறுப்போரை கத்தியால் வெட்டி அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

குள்ளப்பன் தெருவில் விமல் என்பர் வீட்டின் சிறிய அளவில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில், கடைக்கு வந்த 3 இளைஞர்கள் தண்ணீர் பாட்டில் வேண்டும் என கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் பாட்டிலை எடுப்பதற்குள் பட்டாகத்தியை காட்டி, அவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.



 

இரண்டாவது சம்பவம்

 

இதேபோல் சுண்ணாம்புக்கார தெரு, அமுது படி சாலை, தேனம்பாக்கம் சாலை என பல்வேறு இடங்களில் சாலையில் வருவோரை பட்டாக்கத்தியால் , வெட்டி பணம் மட்டும் செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். ஆனைகட்டி தெருவை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ் மற்றும் ஆனந்தன் , சேஷாத்திரி பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ், காஞ்சிபுரம்  டோல்கேட் பகுதியை சேர்ந்த சீனு மற்றும் வீரராகவன் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த தயாளன், சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த சதீஷ் ஆகிய 7 நபர்களும் ஒன்றன்பின் ஒன்றாக பலத்தை வெட்டு காயங்களுடன் கடும் ரத்தம் வெளியேறிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 



பலர் காவல் நிலையத்தில் தஞ்சம்

 

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து பல புகார் அளிக்க காவல் நிலையத்தில் குவிந்ததால் காவல் நிலையமும் பரபரப்புடன் காணப்பட்டது. உடனடியாக ரோந்து சென்று கொண்டிருந்த காவலர்களும் உஷாராகி, தீவிர கண்காணிப்பில் இரவில் கூடுதலாக காவலர்கள் வர வைக்கப்பட்டு அவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் முடக்கி விடப்பட்டன.



 

இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை உடனடியாக கைப்பற்றி சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இளைஞர்கள் பல்சர் பைக் சுற்றி தெரிந்தது கண்டுபிடிக்கப்பட்டு, காவலர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக செயல்பட்டதால், நரேஷ் மற்றும் சுரேஷ் என்ற இரு போதை இளைஞர்கள் பட்டாக்கத்தி,  இருசக்கர வாகனத்துடன் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

 

கஞ்சா போதையில் அட்டகாசம்

 

வெட்டுப்பட்ட நபர்களிடம் இது குறித்து கேட்டபோது, இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்ததாகவும், செல்போன்  மற்றும் பணம் கேட்டதாகவும், நாங்கள் பதில் சொல்வதற்குள், எங்களை பட்டா கத்தியால் தாக்கியதில் நாங்கள் அச்சத்துடன் இருந்தோம் செய்வதறியாது இருந்ததாக தெரிவித்துள்ளனர்.  மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர்களை பார்க்க வந்த உறவினர்கள் கூட பரபரப்பு உடனே காணப்பட்டனர்.‌ இதனால் மருத்துவமனை வளாகத்திற்குள்ளும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 



இது போன்ற துணிகர கொள்ளை மற்றும் மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காஞ்சிபுரம் பகுதிகளில், கஞ்சா கிடைப்பது மிக சர்வ சாதாரணமாக ஆகிவிட்டதாகவும், பள்ளி மாணவர்களுக்கு கூட கஞ்சா கிடைப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க வேண்டும் என்றால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் துவங்கியிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .