தமிழ்நாட்டில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் மும்மொழி விவகாரம் சர்ச்சையாகி வரும் நிலையில், எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழனுக்கு தெரியும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மநீம 8ஆம் ஆண்டு விழா:

சென்னையில் நடைபெற்று வரும் மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு துவக்க விழாவில் , அதன் தலைவர் கமல்ஹாசன் உரை நிகழ்த்தினார். அப்போது, மநீம கட்சியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

அப்போது கமல் பேசியதாவது. “ சில உறவு 2 நாளில் முடிந்துவிடும். ஆனால், உங்களது உறவு , உறவாகி நின்று கொண்டிருக்கிறது.  தாய்-தந்தை, சகோதர-சகோதரிகளை அடுத்து, மிக நீளமான நீடித்த உறவு  உங்களுடந்தான். இதில் எனது பிள்ளையைபோல், புதிய பிள்ளைகளும் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சி.

நாட்டை இணைத்து தைக்க நினைக்கும் காந்தியின் பேரன்களில் நானும் ஒருவன். எனக்கு, எந்தளவு காந்தியை பிடிக்குமோ, அந்தளவு பெரியாரையும் பிடிக்கும். நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்கள் இல்லை. கைதட்டி வேடிக்கை பார்ப்பவர்கள். 

இன்று உலக தாய்மொழிகள் தினம். நம்மை இணைப்பது தமிழ்மொழிதான். மொழிக்காக உயிரை விட்டவர்கள் தமிழர்கள். எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழனுக்கு தெரியும். நிதி தராத மத்திய அரசு என்பதை, நாளைய வரலாறு சொல்லும். 

”20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்க வேண்டும்”

20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு. 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும்; வராதது என் தோல்விதான். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் எனபது வேறு என்பதை எனது அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.

நான் ஏதாவது பேசினால், தோற்றுப்போன அரசியல்வாதி என்பார்கள். அப்போது, இந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக சார்பாக , நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது கிட்டத்தட்ட உறுதி என்பதை உணர முடிகிறது. ஆனால், அது கமலுக்கா அல்லது மநீம கட்சியைச் சார்ந்த வேறொருவருக்கா என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும். 

மேலும், அடுத்த ஆண்டு நமது குரல் சட்டப்பேரவையிலும் ஒழிக்கும் எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

என்னுடைய பணி, கடைசி ஒரு வாக்காளர் இருக்கும்வரை தொடரும். எங்களுக்கு மக்களுக்காக நல்லது செய்யும் எல்லா நாளுமே நல்ல நாள்தான் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.