சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு செய்யலாம் என அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூரைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி, கடந்த 13ம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் கலவரமாக உருவெடுத்துள்ளது.


இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது சாந்தகுமார் அடங்கிய மருத்துவர் குழுவையும் நியமித்து உத்தரவிட்டார். இந்த மறு பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாணவியின் தந்தை வழக்கறிஞருடன் கலந்து கொள்ளவும் அனுமதித்தார்.


மறு பிரேத பரிசோதனைக்கு பின், வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு, அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்பு படையை உருவாக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை குறித்து ஜூலை 29ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார். இந்தநிலையில்,நேற்று உத்தரவிட்டதன் அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்தது.


இதற்கிடையில் தங்கள் தரப்பு மருத்துவரை உடற்கூராய்வு குழுவில் சேர்க்கக் கோரியும், அதுவரை உடற்கூராய்விற்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை முறையிடப்பட்டது. ஆனால் வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், உடற்கூராய்விற்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.


இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா  ஆஜராகி, பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என்றும், உடற்கூராய்வு நிபுணர்கள் வந்துவிட்டார்கள் என்றும், வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய பிறகு பெற்றோர் தரப்பு இல்லாமல் உடற்கூராய்வு செய்யலாமா என தெளிவுபடுத்த வேண்டுமென முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காதது குறித்தும் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு செய்யலாம் என அனுமதியளித்த நீதிபதி, பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண