கள ஆய்வு கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளை, வார்டு, வட்ட கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகளின் செயல்பாடுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்த "கள ஆய்வு குழு" உடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
களப்பணிகள் ஆய்வு குழுவைப் பொறுத்தவரை பல அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அது கட்சி ஆலோசனை அதை வெளியில் கூற விரும்பவில்லை என்றார்.
அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேசிய ஜெயக்குமார்
பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இன்று நாளை என பாஜகவுடன் இப்போதும் கூட்டணி இல்லை எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த வகையிலும் மாற்றமில்லை.
கழகத்தால் முடிவெடுக்கப்பட்டு கழக பொதுச் செயலாளர் இதை அறிவித்தார். பாஜகவுடன் கூட்டணி உள்ளதா என செய்தியாளர்கள் கேட்கும் போது கூட கழகப் பொதுச் செயலாளர் எப்போதும் இல்லை இப்போதும் இல்லை என தெளிவாக கூறியிருக்கிறார். எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
பாஜக - வுடன் , அதிமுக இருப்பது போல் பிம்பம்
நேற்றைய தினம் பொதுச் செயலாளரின் பேட்டியை திரித்து பாஜகவுடன் மறைமுகமான கூட்டணியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இருப்பது போன்ற பிம்பத்தை விவாதமாக செய்தியாக ஆக்குவது முற்றிலும் தவறு.
இதே எம்.ஜி.ஆர் மாளிகையில் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. 2026 - லும் இந்த நிலைப்பாடு தான் தொடரும்.
உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று என திமுகவை போல ஒரு மறைமுக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது. திமுக எம்பிக்கள் வைக்கும் பார்ட்டியில் ஜேபி நட்டா கலந்து கொள்கிறார். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு ராஜ்நாத் சிங்கை அழைக்கிறார்கள்.
பிரதமர் - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
பிரதமரை பொறுத்தவரை எந்த அமைச்சரையாவது பார்த்து இருக்கிறாரா என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார் முதலமைச்சரை பார்ப்பதே அரிது. உதயநிதி பிரதமரை சந்திக்கிறார் என்றால் எந்த அளவுக்கு திமுகவும் பாஜகவும் மறைமுகமான இணக்கத்துடன் உள்ளது. பாஜக வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடனும் திமுக செயல் படுகிறது. இந்த நிலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரை கிடையாது.
கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை இதை தான் நேற்றைய தினம் பொதுச்செயலாளர் கூறியிருந்தார் அதை ஊடகம் திசை திருப்பி இருக்கிறது. இது உண்மை அல்ல.
மக்கள் விரோத சக்தியான திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற ஒத்தக் கருத்தோடு பாஜக தவிர்த்த கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பொதுச் செயலாளரும் கட்சியும் முடிவு செய்யும். இந்த நிலைப்பாட்டில் தான் நேற்றைய தினம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் எந்த காலத்திலும் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை இந்த நிலைப்பாடு தான் எதிர்காலத்திலும் தொடரும் என்று கூறினார்.