Chennai Jallikattu: தை மாதம் வந்து விட்டால் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் தமிழர்கள் பரவி வாழும் அனைத்து பகுதிகளும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய விழாவாக உள்ளது. இந்த பொங்கல் விழாவானது, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் திருவிழாவுக்கு முன்னும் பொங்கல் தினத்திலும் அதன் பின்னும், ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுவது வழக்கம்.  


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீரவிளையாட்டாக கருதப்படும்  ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.  உச்சநீதிமன்ற உத்தரவால் இடையில் தடை ஏற்பட்ட நிலையில் தமிழ்நாடு மக்களின் போராட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் தற்போது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் ஏற்கனவே புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் கடந்த வாரம் நடதப்பட்டது.  ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் பொதுவாக  அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஊர்களின் பெயர் தான் நினைவுக்கு வரும். இதுதவிர சில கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடத்தப்படவே இல்லை. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணமாக அமைந்ததே தலைநகர் சென்னையில் உள்ள மெரினாவில் நடந்த இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம்தான். எனவே சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி ஆண்டு தோறும் எழுந்து வந்தது.  வருகிற மார்ச் மாதம் 5-ஆம் தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது, 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை வெகுவிமர்சையாக கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னையை அடுத்துள்ள படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் மாதம் 5ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள  மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்தப்பட உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் பெயரில் ஒரு காளை களமிறக்கப்பவவுள்ளது. முதலமைச்சர் பெயரில் களமிறக்கப்படும் காளை உள்பட  தமிழ்நாட்டில் உள்ள சிறந்த 501 காளைகள் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி இடம் பெற உள்ளன. தமிழகத்தில் உள்ள சிறந்த மாடுபிடி வீரர்களும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு களம் இறக்கப்படுகிறார்கள். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் வெற்றி   பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது. சென்னையில் முதல் முறையாக நடத்தப்படவுள்ள இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில்  10 ஆயிரம் பேர் பார்வையாளர்களாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நடத்தப்படவுள்ள இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகான முன்னேற்பாடு பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதால், அதற்குள் போட்டி நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேஷ், ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் ஆகியோர் இருந்தனர்.