ISKCON Rath Yatra : சென்னை இஸ்கான் கோயில் சார்பில் பாலவாக்கம் கடற்கரை சாலையில் இன்று ஜெகநாதர் ரத யாத்திரை நடைபெற்றது.


இஸ்கான் கோயில்


சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்கான் கோயில் கிருஷ்ணரை வழிபடும் இந்துக்களிடையே மிகவும் பிரசித்து பெற்ற கோயிலாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளை மாளிகை போன்று பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் இஸ்கான் கோயில் அமைந்துள்ளது.  குறிப்பாக, "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" என்ற இஸ்கான் இயக்கத்தின் பக்தி கோஷம் மிகவும் பிரபலமானது.




இஸ்கான் அமைப்பின் சார்பில், பல்வேறு நாடுகளில், பல்வேறு சமயங்களில் பல்வேறு ரத யாத்திரை உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படும். அந்த வகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், 40வது ’ஸ்ரீ ஸ்ரீ  ஜெகன்னாதரின் ரத யாத்திரை'  இந்த ஆண்டும், வரும் 25-ம் தேதி (இன்று)   சிறப்பாக கொண்டாடப்படது. அதற்கேற்ப, சிறப்பு ஏற்பாடுகளை  அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் கிளை ஏற்பாடு செய்தது.


ஸ்ரீஸ்ரீ ஜெகன்னாதர் ரதயாத்திரை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோ் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) சார்பில் 40-வது  ஸ்ரீஸ்ரீ ஜெகன்னாதர் ரதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்கான் அமைப்பின் தென்னிந்திய தலைவர் பானு சுவாமி மகாராஜ் ரத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீஸ்ரீ ஜெகன்னாதர், பலராமன், சுபத்ரா ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.




தொடர்ந்து தீபாரதனைகள் காட்டப்பட்டு, கோவிந்தா, கோவிந்தா என கிருஷ்ண நாமம் முழங்க மங்கள இசையுடன் பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏராளமான பெண்கள், குழந்தைகளும் கீர்த்தனைகளை பாடி, பரவசத்துடன் ரத யாத்திரையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கம் பகுதியில் புறப்பட்ட ரதமானது, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் வழியாக அக்கரையில் உள்ள கோயிலைச் சென்றடைந்தது. அங்கு பஜனை, கீர்த்தனை போன்றவை நடைபெற்றன. இதில் பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்பட்டது.




 நிகழ்வில், தொழிலதிபர் சுரேஷ் சாங்கி, ஐடிசி திட்டப் பிரிவு ஆலோசகர் சுனில் நாயர் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரத யாத்திரை குறித்து இஸ்கான் அமைப்பினர் கூறுகையில், "பகவான் கிருஷ்ணரை நாம் தேடிச் சென்று வழிபடும் நிலையில், பகவானே நம்மைத் தேடி வருவதற்கான நிகழ்வு தான் ரத யாத்திரை. இதில் பகவான் ஜெகன்னாதரை நேரில் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை" என்றனர்.