ஈஷா யோகா - மகா சிவராத்திரி

Continues below advertisement

ஈஷா யோகா மையம் சார்பில் ஆண்டு தோறும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு ஆதியோகி ரத யாத்திரை சென்னை மாநகரில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது.

இது குறித்து தென் கைலாய பக்தி பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கோபால் பேசியதாவது :

Continues below advertisement

வருகின்ற பிப்ரவரி 15 ம் தேதி கோவையில் ஈஷா மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையிலும் , கோவைக்கு நேரில் வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாதவர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்யும் வாய்ப்பை வழங்கும் வகையிலும் இந்த ஆதியோகி ரத யாத்திரை ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

ஜனவரி 1 முதல் ஆதியோகி ரத பயணம்

இந்த ஆண்டு, தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் சார்பில், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் ஆதியோகி ரதங்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றன. இந்த ரத யாத்திரையை அந்தந்த ஆதீனங்களின் குருமார்கள் மற்றும் சன்னிதானங்கள் தொடங்கி வைத்தனர்.

அந்த வகையில், வடக்கு மண்டல யாத்திரை காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ,தாம்பரம், வேளச்சேரி, அடையார், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், பூந்தமல்லி, வளசரவாக்கம், ஆவடி உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எட்டாம் தேதி வரை ஆதியோகி ரதம் பயணம் மேற்கொள்ள உள்ளது.

7 அடி உயரத்தில் ஆதியோகி  - திருவள்ளூர் சிலை

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த ரத யாத்திரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆதியோகி ரதம் செல்ல உள்ளது. அதன் பின்னர் வடக்கு மண்டலத்தின் பிற பகுதிகளிலும் பயணம் தொடரும்.

இந்த ரதங்களில், ஏழு அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ஆதியோகி  -  திருவள்ளுவர் சிலை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, மொத்தம் நான்கு ரதங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன.

பொதுமக்கள் இலவச தரிசனம்

இந்த ஆதியோகி ரத யாத்திரைகள், மகா சிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள், 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக, சுமார் 30,000 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த ரத யாத்திரையில், பொதுமக்கள் இலவசமாக ஆதியோகியை தரிசனம் செய்யும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.