சென்னையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்டதையடுத்து தண்ணீர் கொடுத்து மேடையிலேயே எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் அமர வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு மணிநேரம் தொடர்ந்து பேசியதாலும், வெயில் தாக்கத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்தபின்பு தனக்கு ஒன்றும் இல்லை என தெரிவித்து சிரித்த முகத்துடன் வீடு திரும்பினார்.
மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் ஜூலை 25ம் தேதி முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் 8 கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆனால், சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறாது என அறிவித்து (இன்று) ஜுலை 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிடிசாமி தலைமையில் சென்னை பாரிமுனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா ஒன்றும் சாதாரணமாக பொறுப்புக்கு வந்துவிடவில்லை. பல இன்னல்களை சந்தித்தார். இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள். அதிமுக உழைப்பால் உயர்ந்த கட்சி. எந்தவொரு இயக்கத்திற்கு வலிமை இருக்கிறதோ, அதை யாரலும் அழிக்க முடியாது.
நான் ஆட்சிக்கு வந்தபோது 3 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என நினைத்தார்கள். ஆனால் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு நான்கரை ஆண்டு சிறப்பான ஆட்சியை தந்தோம். எத்தனை வழக்குகள் வந்தாலும் துணிவுடன் எதிர்கொள்ளும் சக்தி அதிமுகவுக்கு உண்டு.
திமுகவின் 14 மாத ஆட்சிகாலத்தில் விலைவாசி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி என எல்லாவற்றிற்கும் வரி உயர்ந்துவிட்டது. தமிழகதத்தில் ஏற்படும் மின்தடையால் மீண்டும் ஒருமுறை திமுக ஆட்சி கவிழும். முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஒப்புதல் வாக்குமூலம் போல, மின்தடையால் திமுக ஆட்சியை இழந்தது.தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மறந்த கட்சி திமுக. அதிமுக கொண்டு வந்த மக்கள் நல திட்டங்கள் அனைத்தையும் முடக்கிய கட்சி விடியா திமுக. பொய் வாக்குறுதிகளால் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. போதைப் பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி முதல் பெட்டிக் கடை வரை அனைத்து இடங்களிலும் கஞ்சா கிடைக்கிறது. நிர்வாக திறமை இல்லாமல் போட்டோ ஷூட் மட்டுமே ஸ்டாலின் நடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்