அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ரெண்டகம் படத்தை இந்தியாவில் ஓடிடி-யில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 

ஃபெலினி இயக்கத்தில் தமிழில் ரெண்டகம் என்ற பெயரிலும், மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரிலும் இயக்கக்கப்பட்ட திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ரெண்டகம் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாக இருந்த நிலையில் அதற்கு தடைக்கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

 

அதில், இந்த படத்தின் கதையை ஜாவா என்ற பெயரில் இயக்குவதற்காக நடிகர் அரவிந்த் சாமியிடம் கதை சொல்லியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கதையை பதிவு செய்து அதற்கான காப்புரிமை பெற்ற நிலையில் இதை கதை களத்துடன் தமிழில் ரெண்டகன் என்ற படம் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

இன்று ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், ரெண்டகன் படத்தை ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 

 

மேலும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா பத்து லட்சம் ரூபாயை வரும் 10ம் தேதிக்குள் டெபாசிட் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அன்றைக்கு ஒத்திவைத்தார்.

 


















மற்றொரு வழக்கு

 

காவல் துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் தயால் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக்குடன் இணைந்து கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்து கட்ட பஞ்சாயத்து செய்து வருவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுகுமார் என்பவர், உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். 

 

புகாரை விசாரித்த கீழ்ப்பாக்கம்  சரக  முன்னாள் உதவி ஆணையர் ஹரி குமார், வழக்கறிஞர் சுகுமார் தான் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் , சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில்  செயல்படுவதாகவும் அறிக்கை அளித்தார். அத்துடன், வழக்கறிஞர் சுகுமாரை  சரித்திர பதிவேடு குற்றவாளியாக காவல் துறையினர் அறிவித்தனர்.

 

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தமது பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட  காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

 

மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.  இதனை எதிர்த்து காவல் துறை அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

 

மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என காவல்துறையினர் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ்திலக் வாதிட்டார். 

 

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.