’காஞ்சிபுரத்தில் தர நிர்ணய சான்றிதழ் இல்லாமல் இயங்கும் எம்.சாண்ட் ஆலைகள்’ : தூசிகளை மெருகேற்றி எம்.சாண்ட் என விற்கும் ஆபத்து..!
கிஷோர் | 17 Aug 2021 11:53 AM (IST)
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித் துறையிடம் தரநிர்ணய சான்றிதழ் பெறாமல் 400- க்கும் மேற்பட்ட எம்- சாண்ட் ஆலைகள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது..
எம்- சாண்ட்
தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. மணல் விற்பனையில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதால் 2017ம் ஆண்டில் தமிழக அரசு மணல் விற்பனை தொடர்பாக TN Sand என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது.இதற்கிடையே எம் சாண்ட் எனப்படும் மணலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக மணல் விற்பனை கிடப்பில் போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எம்-சாண்ட் விற்பனை அதிகரிக்கத் துவங்கியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் எம்- சாண்ட் ஆலைகள் உருவாகத் துவங்கின. பொதுமக்களும் மெல்ல மெல்ல எம்சாண்ட் பயன்படுத்த துவங்கினர். தமிழகம் முழுவதும் 60 சதவீதத்துக்கும் மேலான கட்டிடங்கள் தற்போது எம்சாண்ட் மூலமாக கட்டப்பட்டு வருகிறது. இருந்தும் எம்- சாண்ட் மீதான நம்பகத்தன்மை பொதுமக்களிடையே குறைவாக உள்ளது. அதேபோல் தரமில்லாத எம்-சாண்ட் விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியுடன் இயங்கிவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகளில் தயாரிக்கப்படும் எம்.சாண்ட் தரமானது என்று உறுதிப்படுத்துவதற்காக , தரச் சான்றிதழை பொது பணித்துறை வழங்கி வருகிறது. தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆலைகளும் கட்டாயமாக இந்த தர சான்றிதழை பெற்று இருக்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இறுதியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 358 எம்-சாண்ட் ஆலைகள் மட்டுமே பொதுப்பணித் துறையினரால் வழங்கப்படும் தரச் சான்றிதழை பெற்றுள்ளன என்றும் மீதம் இருக்கும் நிறுவனங்கள் தர சான்றிதழை இல்லாமல் இயங்கி வருகின்றன எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் 456 எம்சாண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 25 நிறுவனங்கள் என மொத்தம் 50 நிறுவனங்கள் மட்டுமே பொதுப்பணித் துறையினரால் வழங்கப்படும் தர சான்றினை பெற்றுள்ளது. மீதி ஆலைகள் இதுவரை தர சான்றிதழ் பெறவில்லை, 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போது தர சான்றிதழ் இல்லாமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது
தர சான்றிதழ் இல்லாமல் இயங்கி வரும் ஆலைகள் மூலமாக தரமற்ற எம்.சாண்ட் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சில குவாரிகளில் ஜல்லி கற்கள் உள்ளிட்டவை தயாரிக்கும்போது கழிவுகளாக வெளியேற்றும் தூசியை சற்று மெருகேற்றி அவற்றை எம் சாண்ட் எனக் கூறி ஏமாற்றி விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒன்றரை யூனிட் எம்.சாண்ட் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.
பொதுப்பணித் துறையின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் பெரும்பாலான எம்-சாண்ட் செயற்கை மணலில் கிரஷர் டஸ்ட் அதிக அளவு கலந்து இருப்பதாக கூறப்படுகிறது பொதுவாக கிரஷர் டஸ்ட் ( தூசிகள் ) என்பது ஜல்லிகளை உடைக்கும்போது உருவாகும் கழிவு பொருள் ஆகும். அவற்றை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் இதன்காரணமாக கட்டிடம் உறுதித் தன்மை குறையும்.
எனவே, தமிழகத்தில் அரசு அறிவுறுத்தலின்படி பொதுப்பணித்துறை கீழ் வழங்கப்படும் எம்-சாண்ட் தரச் சான்றிதழ் பெறாத ஆலைகளிலிருந்து விற்கப்படும், செயற்கை மணலின் தரத்தை முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு கனிமவள நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை (கட்டிடம்) அனுமதியில்லாமல் தரமற்ற எம்-சாண்ட் தயாரித்து விற்றால் 2 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட புதிய சட்டதிருத்த கொள்கையை அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்கள்.ஆனால் இந்த சட்டம் இன்னும் அனுமதி அனுமதி பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கல்குவாரி ஆலை நிர்வாகத்தை சார்ந்த ஒருவர் கூறுகையில் , ஆலைகளில் விற்கப்படும் பெஸ்ட் என கூறப்படும் தேவை இல்லா மண்ணை மிகவும் குறைந்த விலைக்கு, எங்களிடம் இருந்து லாரி உரிமையாளர்கள் வாங்கிச் சென்று அவற்றை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து இதுதான் உண்மையான எம்சாண்ட் என்று கூறி ஏமாற்றி விற்று விடுகிறார்கள். இதன் காரணமாகத்தான் போலியான எம்சாண்ட் மக்களிடம் சென்று சேர்கிறது. தங்களுக்கு தரமான எம்சாண்ட் வேண்டும் என்றால் நேரடியாக ஆலைக்கு வந்து, ஆலையில் இருக்கும் செயற்கை மணல் தரமாக உள்ளதா என்பதை பரிசோதனை செய்த பிறகே வாங்க வேண்டும் என தெரிவித்தார்.
தரமற்ற முறையில் சந்தையில் கிடைக்கும் செயற்கைமணலால் பேராபத்து ஏற்படுவதற்கு முன் உடனடியாக அவற்றை தவிர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது