கிழக்குக் கடற்கரை சாலையில் கொடூர விபத்து, ஆறு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( Chennai ECR ROAD )
செங்கல்பட்டு ( Chengalpattu news ) : சென்னை கிழக்கு கடற்கரை சாலை எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கக்கூடிய சாலைகளில் ஒன்று. குறிப்பாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்பவர்கள் அதிக அளவு சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்துகின்றனர். அதிகளவு வாகனங்கள் இதில் செல்வதால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலைகளில் கோவளம், மகாபலிபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது விபத்து ஏற்படுகிறது. இந்தநிலையில் இன்று கோவளம் அருகே ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின்னால் வந்த கார் மோதி
செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை அடுத்துள்ள நெரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகன் தனசேகரன் ( 35). இவருக்கு திருமணம் ஆகி 30 வயதில் மனைவியும் 6 வயதில் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இன்று தனது குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் கோவளம் வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் தனது மனைவி மற்றும் குழந்தை ஆகியவர்களை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்திலிருந்து மகாபலிபுரம் மார்க்கமாக சென்று கொண்டிருந்த பொழுது, பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
தூக்கி வீசப்பட்ட குடும்பத்தினர்
இந்தக் கொடூர விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தனசேகரன் மற்றும் அவரது மனைவி மற்றும் ஆறு வயது குழந்தை தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே தனசேகரன் மற்றும் அவரது மனைவி துடிதுடித்து உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய 6 வயது குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர், அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு 6 குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற கேளம்பாக்கம் போலீசார் போக்குவரத்தை சரி செய்து, கார் ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் உயிரிழந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்ததாவது : இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பின்னால் வந்த கார் மோதியதால் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் கார் ஓட்டுநர் பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உடனடியாக போக்குவரத்து சரி செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, என போலீசார் தெரிவித்தனர்.