செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே அனந்தமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வயல் நடுவில் ஒரு மரத்தடியில் சாய்ந்த நிலையில் ஒரு கல் சிலையை திருவாதூர் அரசு மேல் நிலைப்பள்ளி உதவி் தலைமையாசிரியரும் கவிஞருமான செ.ப.தமிழரசன் கண்டெடுத்தார்.




இது குறித்து செ.ப.தமிழரசன் பேசும்போது, ”நான் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக செல்லும்போது தற்செயலாக அந்த பழங்கால சிலையை கண்டேன். சிலை 3 அடி உயரமும் 2 அடி அகலமும் உள்ள ஒரு பலகை கல் மீது காணப்பட்டது. அந்த சிலையை உற்று நோக்கியபோது, வலது கையில் ஒரு மலர்ந்த தாமரை மலரை ஏந்தியபடியும், இடது கை தனது வயிற்றுக்கு கீழே வைத்தபடி காணப்பட்டது என்றார். மேலும், இந்த சிலை சோழர் காலத்தை சேர்ந்தது. ஜேஷ்டாதேவி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் முன்னோர்கள் இந்த தேவியை தினமும் வழிபட்டு வந்தனர். மூத்த தேவி என்று கூறப்படும் இந்த தமிழ் தெய்வம் காலப்போக்கில் மூதேவி என்றாகிவிட்டது. 11-ஆம் நூற்றாண்டு அல்லது 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும் சாதாரணமாக இதுபோன்ற அமைப்பில் காணப்படும் பெண் சிலையின் இருபுறமும் அவரது மகன் (மாந்தர்), மகள் (மாந்தி) எனக் கூறப்படும் உருவங்களுடன், காக்கை கொடியை் கையில் பிடித்தபடி காணப்படும். ஆனால் இந்தச் சிலையில் அவை காணப்படவில்லை என்றார்.



 மூதேவி ( தவ்வை )


தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்தத்தில் இவள் வழிபாடு முக்கிய இடத்தில் இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.


பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.  மூதேவி ( தவ்வை ) குறித்த தகவல் சங்க இலக்கியங்களிலும், திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும்புலவர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.


பழமையான இச்சிலை குறித்து தொல்லியல் துறையினர் உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக உள்ளது.


உத்திரமேரூர் : விபூதி.. நடனம்.. 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிலை கண்டுபிடிப்பு..! வரலாறு என்ன?