Thiruvanmiyur to Akkarai Road: சென்னை திருவான்மியூர் முதல் அக்கறை வரை உள்ள 6 வழிச்சாலை விரிவாக்கம், பணி வரும் மே மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சியை நோக்கி தமிழகம்
தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால், முறையான சாலை வசதிகள் என்பது இன்றியமையாததாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலால், பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று போக்குவரத்து நெரிசல் காரணமாக, பொதுமக்களும் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை -Chennai ECR Road
இதனைக் கருத்தில் கொண்டு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையை மையமாக வைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக முக்கிய திட்டமாக, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத் திட்டம் பார்க்கப்படுகிறது. திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் மிக முக்கிய பகுதியாக, திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உள்ள 15 கிலோமீட்டர் தூர சாலை பார்க்கப்படுகிறது. 15 கிலோமீட்டர் தூரத்தில், 17 இடங்களில் சிக்னல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஆகிறது.
திருவான்மியூர் அக்கரை சாலை ஆறு வழியாக விரிவாக்கம் -Thiruvanmiyur to Akkarai 6 Lane Road
இச்சாலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் வாகனங்கள் வரை சென்று வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி காரணமாக, இந்த பகுதியில் குடியிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அடுக்குமாடி கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இவ்வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசலுக்கு காரணங்களாக உள்ளன.
இச்சாலையை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் பகுதியில் இருந்து அக்கரை வரை, சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அகலப்படுத்த 2009 இல் முடிவு செய்யப்பட்டு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திட்டம் முடிவடைவது எப்போது?
தொடர்ந்து ஆட்சி மாற்றம் காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி 95% நிறைவடைந்துள்ளது. மின் கம்பங்கள் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மூடு கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியும் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இச்சாலையின் மையத்தில் 1.2 மீட்டர் அகலத்திற்கு மைய தடுப்புச் சுவர் அமைக்கப்பட உள்ளது. தடுப்புச் சுவரின் இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு தார் சாலை, 1.65 மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது. 2 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிகால்வாய் மற்றும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், வருகின்ற மே மாதம் இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், உயர்மட்ட மேம்பால சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.