செங்கலின் முக்கியத்துவம் ; 

கட்டுமான துறையில் நாள்தோறும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் , குறிப்பிட்ட சில பொருட்கள் விஷயத்தில் மக்கள் தங்கள் எண்ணத்தை எளிதில் மாற்றி கொள்வதில்லை. குறிப்பாக கட்டுமான பணிக்கு களிமண்ணால் தயாரிக்கப்படும் செங்கல் பாரம்பரியமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கட்டட பணிக்கு செங்கல் தயாரிப்பு முறையில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் வந்தாலும், இன்றும் செங்கற்களின் பயன்பாடு குறையவில்லை. சுற்றுச் சூழல் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் கட்டுப்பாடுகள் வந்தாலும் , செங்கல் தயாரிப்பு தொடர்ந்து நடக்கிறது.

ஹாலோ பிளாக் , சாலிட் பிளாக் , எரிசாம்பல் கற்கள், டெரகோட்டா பிளாக் போன்றவை மக்கள் மத்தியில் பிரபலமானாலும் செங்கலுக்கான இடம் இன்றும் அப்படியே உள்ளது. இருப்பினும் , கட்டுமான பணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் நடைமுறையில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

இயற்கையாக கிடைக்கும் களிமண்ணை முறையாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட பல கட்டடங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. ஆனால் சமீப காலங்களில் கட்டப்படும் பல்வேறு கட்டடங்களில் நீர்க்கசிவு போன்ற பிரச்னைகளால் செங்கல் குறித்த தவறான எண்ணம் ஏற்படுகிறது.

குறிப்பாக ஒரு கட்டடத்தை கட்டும் போது , அஸ்திவாரத்தில்லாமல் மேல் தரை மட்டம் வரையிலான சுவர் எழுப்பும் இடத்தில் செங்கற்கள் பயன்படுத்துவதால் கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த இடத்தில் சுவரின் இரண்டு பக்கத்திலும் முறையான பூச்சு வேலை செய்தால் நீர்க்கசிவு பிரச்னையை தடுக்கலாம்.

கட்டடத்தில் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் செங்கல் சுவர் பகுதியில் எழுப்பும் நிலையில் சில விஷயங் களில் கூடுதல்கவனம் செலுத்துங்கள். குறிப்பாக உயரவாக்கில் சுவர் எழுப்பும் நிலையில் , மூன்று அடிக்கு ஒரு இடத்தில் மெல்லிய கம்பி வலையை வைத்து அதன் மேல் கலவையை கொட்டி , கட்டு வேலை செய்ய வேண்டும்.

சில சமயங்களில் கட்டு வேலை வரிசையில் முழு செங்கல் வைக்கும் அளவுக்கு இடம் கிடைக்காத நிலையில், அரைகல் , அல்லது கால் பங்கு கல்லை வைத்து கலவையுடன் சேர்க்க வேண்டும். ஆனால்  இது போன்ற இடங்களில் செங்கற்களை உடைத்து வைப்பதற்கு பதில் கலவையை நிரப்பி அடைத் துவிடலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.

இது போன்ற வழி முறைகள் சுவரில் குறைபாடு ஏற்பட வழிவகுத்துவிடும். எனவே, செங்கற்களை பயன்படுத்தி கட்டுவேலை மேற்கொள்ளும் போது , தரமான கற்களை பயன்படுத்த வேண்டும், கலவையில் உரிய ஈரப்பதம் இருப்பதை யும் உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.