டம்மி துப்பாக்கி வைத்திருந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டு ஒன்று, இரண்டு செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


சென்னை பெருநகரில் குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் குற்றச் செயல்களைக் கண்காணித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்பேரில், பல்வேறு சிறப்பு சோதனைகள் மற்றும் வாகன தணிக்கைகளும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதன் தொடர்ச்சியாக மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வானகரம் பகுதி அருகே காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அதன்பேரில் மேற்படி நபர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது, அதில் பொம்மைத் துப்பாக்கி மற்றும் 11 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.


இதனையடுத்து பொம்மைத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த செல்வம் (எ) ரோஸ் பாக்யம், வ/45, என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பிளாஸ்டிக் பொம்மை துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, இரண்டு செல்போன்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான கூழாங்கற்கள், ஆணிகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட செல்வம் (எ) ரோஸ் பாக்யம் என்பவர் சோமங்கலம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு ஒன்று உள்ளதும் தெரிவந்தது.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட செல்வம் (எ) ரோஸ் பாக்யம் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.


மற்றொரு சம்பவம்


முன்னதாக இதேபோல் கஞ்சா செடி வளர்த்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.


சென்னை, எம்ஜிஆர் நகர், பாரதிதாசன் தெருவில், அதிகாலையில் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அடுத்தடுத்து மூன்று பேரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்துள்ளனர்.


இதன் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். அதேவேளை சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளை வைத்து 17 வயது சிறுவனை அடையாளம் கண்ட காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


பின்னர் சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அபிஷேக் (வயது 20) வீட்டிற்குச்சென்றுள்ளனர். அப்போது அபிஷேக்கின் மொபைல் போனை சோதனை செய்தபோது, கஞ்சா செடியின் புகைப்படத்தை காவல் துறையினர் பார்த்துள்ளனர்.


மேலும் சந்தேகத்துக்கிடமான முறையில் வீட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு தண்ணீர் தொட்டிக்கு அருகே மறைவாக மண் தொட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.