வடகிழக்கு பருவம் மழை காலகட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை அதிகளவு கன மழை பெய்வது வழக்கமாக இருந்து வருகிறது. வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான, மாண்டஸ் புயலானது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது. புயலின் எதிரொலியாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் புயல் கரையைக் கடந்த நாளன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 சென்டிமீட்டர் மழை பெய்தது.



 

தொடர்ந்து நேற்று மற்றும் இன்று விடியற்காலை முதலிலேயே காஞ்சிபுரம் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், ஓலிமுகமது பேட்டை, கீழம்பி,தாமல், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை  வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரத்தில் 6 சென்டிமீட்டர் மழையும், வாலாஜாபாத்தில் 2.2 சென்டிமீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 1.9 சென்டிமீட்டர், குன்றத்தூரில் 3.6 சென்டிமீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 17 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது.

 



வேகவதி ஆற்றில் வெள்ளம்

 

காஞ்சிபுரத்தில் பல முக்கிய நீர் பிடிப்பு பகுதிகள் இருந்தாலும், காஞ்சிபுரம் மாநகரத்தின் மையப் பகுதியில் செல்லக்கூடிய முக்கிய நதியாக வேகவதி ஆறு விளங்கி வருகிறது.  வேகவதி ஆற்றில் முக்கிய, நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வழிவதால்,  வேதவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரம் வசித்த மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்வதால், நகரில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

 

மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள்

 

மாவட்டம் முழுவதும் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 21 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 2668 கோழிகள் உயிரிழந்துள்ளன.123 வீடுகள் பாதிப்படைந்துள்ளது. 200 க்கும் மேற்பட்ட மரங்கள் புயலால் சாய்ந்தது. 117 கம்பங்கள் பாதிப்பு  அடைந்து உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண