செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலை ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று பரவியதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வருபவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்தும் சிகிச்சை அளிப்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்பொழுது அவர்களிடம் நெகடிவ் வரும்வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்தையும் தாண்டி அளவிலான பாதிப்புகளாக கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏழு எட்டு மாநிலங்களில் ஆயிரத்திலிருந்து 5000 வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றைய ஒரே நாளில் இந்தியாவில் 17 ஆயிரத்தை தொற்று கடந்திருக்கிறது.
கடந்த 4 மாதங்களுக்கு பிறகு அதிகபட்சமாக இந்தியாவை கடந்த தொற்றாக எண்ணிக்கையாகும். அந்த வகையில் தமிழகத்திலும் நேற்று ஒரே நாளில் 1359 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடியிருப்பில் 6 நபர்களுக்கு தொற்று பாதிப்பை தொடர்ந்து இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
இங்கு ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள காரணத்தினால் குடியிருப்பு பராமரிப்பு பணியில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்கள் அனைவருக்குமே ஆர்டி.பி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்காக தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று 1359 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பாதித்தவர்கள் என்கின்ற வகையில் 5912 பேர் உள்ளனர். 92 சதவீதம் பேர் வீடுகளை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எட்டு சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் மிதமான பாதிப்புடன் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாருக்கும் ஆக்சிஜன் தேவை என்கிற நிலையில் சிகிச்சை பெறவில்லை. தற்போது பரவி கொண்டிருக்க கூடிய தொற்று மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டுள்ளது. ஒருவருக்கு ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் உள்ள ஒட்டுமொத்த உறுப்பினருக்கும் பரவக்கூடிய பாதிப்படையும் வகையில் வீரியம் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பொது இடங்களில் செல்பவர்கள் அவசியம் முககவசங்களை அணிந்து கொள்வது தவிர்க்க முடியாத ஒன்று. முகக்கவசங்கள் அணிந்து கொண்டு அவற்றின் பாதிப்பிலிருந்து மீட்டுக் கொள்ள முடியும். 24 மணி நேரமும் தடுப்பூசி போடப் கூடியவகையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டாமல் அரசு மருத்துவமனை நிர்வாகிகளை அனுகி தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார். விடுபட்டு உள்ளவர்களை விவரங்களை சேகரித்து முகாம்களின் மூலம் வருகின்ற பத்தாம் தேதி தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும்.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் தினமும் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் நேற்று 266 பேரும் மொத்தமாக 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 32 பேரும் 902 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் இந்த வைரஸ் ஒரு மாற்றம் என்பது மக்களுக்கு நேரடியாக தெரிகிறது. தற்பொழுது வந்திருக்கக்கூடிய பாதிப்பு என்பது வேகமாக பரவக்கூடிய வைரஸ் பாதிப்பு. நம்மை மற்றும் நம் குடும்பத்தின் அனைவரையும் தாக்கும் அளவுக்கு உரியது. அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் அரசு சொல்லும்படி கேட்க வேண்டும் என்ற மனநிலை இல்லாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம் உயிர் நம்மை காத்துக்கொள்வது நம் கடமை என்ற வகையில் முககவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது கைகளைக் கழுவிக் கொள்வது போன்ற விதி முறைகளை கடைபிடிப்பது அவசியமாகும்.
12 வயதை கடந்த அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 60 வயதைக் கடந்தவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் இலவசமாக போடப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனையில் போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனை பூஸ்டர் தடுப்பூசி 225 ரூபாய், 150 கூடுதலாக ஜிஎஸ்டி சேர்த்து 384.25 பைசா என நிர்ணயம் செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் பங்களிப்போடு அந்த தடுப்பூசியில் இலவசமாக செய்ய வேண்டும் என்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி பணி சென்னையில் தமிழக முதல்வரால் தொடங்கப்படும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்