சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் பூங்கா அமைக்க, விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பு தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பிரம்மாண்ட பசுமை பூங்கா அமைய உள்ளது. ரூ.4,832 கோடி மதிப்பு நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்
குதிரை பந்தயங்கள் நடந்த இடமாக கிண்டி ரேஸ் கோர்ஸ் இருந்து வருகிறது. இந்த இடம் அரசால் 99 வருடங்களுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வசதி படைத்த பணக்காரர்கள் குதிரைகள் மீது பெரிய தொகையை பந்தயம் கட்டி விளையாடுவதற்காக மாநகரின் மையப்பகுதியில் சுமார் 160 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கு நடைபெறும் செயல்களில் எந்தப்பொதுநலனும் இல்லை.
அந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் உள்வாடகைக்கு விட்டு பெரும் தொகையை சம்பாதித்து வருகிறது. எனவே, இந்த நிலத்தை மீட்டு தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்காக பொதுநல நோக்கில் பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் இந்த இடம் மீட்கப்பட்டது.
எழுந்த கோரிக்கைகள்
இந்த இடத்தில் பூங்காக்கள் அல்லது வளர்ச்சி திட்டங்கள் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கையை முன் வைத்தனர். குறிப்பாக பெரும்பாலான அமைப்பினர், சென்னையில் பசுமை பூங்காக்கள் அதிக அளவு இல்லை. இங்கிருக்கும் இடத்தை பயன்படுத்தி பசுமை பூங்காக்கள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் சென்னை நகருக்கு, இயற்கையாக நலன் கிடைக்கும் என கோரிக்கையில் எழுந்திருந்தன.
பசுமை பூங்கா - Guidy Race Course Green Park
இதனைத் தொடர்ந்து கிண்டி பகுதியில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்திருந்தது. தொடர்ந்து, கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது.
இந்நிலையில், கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைகிறது. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
பசுமை பூங்காவில் என்னென்ன வசதிகள்?
கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் பரப்பளவில் இந்த பிரம்மாண்ட பசுமை பூங்கா அமைய இதற்காக விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பு தயார் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரிய அதிகாரபத் தகவல் வெளியாகியுள்ளது.
கிண்டியில் அமைய உள்ள இந்த பசுமை பூங்காவில் வண்ண மலர்படுகைகள், தோட்டங்கள், மலர் சுரங்க பாதைகள், பறவைகளுக்கான தனி இடம், வண்ணத்துப்பூச்சிக்கான தோட்டம், நீர்வீழ்ச்சிகள், கண்ணாடி மாளிகைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்கள் என 25 வகையான வசதிகள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசுமை பூங்க அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.