Chennai Pollution: சென்னையில் தூசி மற்றும் காற்று மாசுபாட்டை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

சென்னை மாநகராட்சி நடவடிக்கை:

தலைநகர் சென்னை அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. அதோடு, வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் ஏராளமான கட்டுமான பணிகளும் தினசரி நடைபெற்று வருகின்றன. இதனால் தூசிகள் பரவி ஏற்படும் காற்று மாசுபாடு என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. குழந்தைகள், மூத்த குடிமக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுகின்றன. வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தான், சென்னையில் தூசி பிரச்னை மற்றும் காற்று மாசுபாட்டை குறைத்து, தரத்தை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக சாலைகள் மற்றும் கட்டுமான தளங்களிலிருந்து வரும் தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்த கோடையில் தொடர்ச்சியான முயற்சிகளைச் செயல்படுத்த உள்ளது.

Continues below advertisement

தெருவை சுத்தப்படுத்தும் இயந்திரம்:

தெருவை சுத்தம் செய்யும் புதிய இயந்திரத்தை ஒரு வாரத்திற்கு நகரின் ஏதேனும் ஒரு பகுதியில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தி, அதன் செயல்திறனை மதிப்பிட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதேபோன்ற வாகனங்கள் தற்போது பெங்களூருவிலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் தான், ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (BBMP) உடன் இணைந்து, ஒரு வாகனத்தை ஒப்பந்த அடிப்படையில் சென்னைக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இயந்திரம் செயல்படும் விதம்:

சக்சன் ஸ்வீப்பர்களை கொண்டு முதலில் சாலை சுத்தம் செய்யப்பட்டு, தளர்வான தூசி மற்றும் குப்பைகள் அகற்றப்படும். அதைத் தொடர்ந்து, அந்த இயந்திர வாகனமானது சாலையில் சமமாக தண்ணீரை தெளிக்கும். பிரதான சாலைகளில் மனிதர்களை கொண்டு துப்புரவு பணிகள் செய்வதை தவிர்த்து, இந்த இயந்திர வாகனங்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பிரதான சாலைகளில் பயன்படுத்தும் நோக்கில் 20 வாகனங்களை கொள்முதல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே,  சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திலிருந்து ஜெட் ஸ்ப்ரேயர்கள் மற்றும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி பேருந்து நிறுத்துமிடங்கள் மற்றும் நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணிகளை ஜி.சி.சி ஏற்கனவே மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தூசி பிரச்னையை கட்டுப்படுத்த நடவடிக்கை:

தளர்வான தூசி படிவுகளைக் குறைக்க, நகரத்தின் அனைத்து பேருந்து வழித்தட சாலைகளிலும் எண்ட் டூ எண்ட்  நடைபாதை அமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துகிறது. முறையான நடைபாதை இல்லாத ஒரு சிறிய பகுதி கூட குறிப்பிடத்தக்க தூசியை உருவாக்குகிறது, குறிப்பாக வறண்ட காலநிலையில் மோசமான ஆபத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியான நடைபாதையை உறுதி செய்வதன் மூலம் - மைய மீடியன்களிலிருந்து சாலைகள், சாஸர் வடிகால்கள் மற்றும் நடைபாதைகள் வரை - தூசி அளவை திறம்பட குறைக்க முடியும் என்று மாநகராட்சி நிர்வகாம் திட்டமிட்டுள்ளது.

தூய்மையான காற்று

சாலையோர பூங்காக்களில் நகர்ப்புற பசுமையாக்குதல், திறந்தவெளிகளில் புல்வெளிகளை அமைத்தல் மற்றும் மரம் நடும் பணிகளை தீவிரப்படுத்துதல் ஆகியவற்றிற்கும் மாநகராட்சி முன்னுரிமை அளிக்க உள்ளது. சுத்தம் செய்தல் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பிற்கு அப்பால், கட்டுமானம் & இடிப்பு (C&D) கழிவு மேலாண்மை மற்றும் சுத்தமான கட்டுமான வழிகாட்டுதல்களை கட்டிட இடிப்பு அனுமதி செயல்முறையில் ஒருங்கிணைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் காற்று மாசுபாட்டை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது.

புதிய கட்டுப்பாடுகள்:

காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான வரைவு வழிகாட்டுதல்களில், ஒரு ஏக்கர் வரையிலான நிலங்களுக்கு 6 மீட்டர் உயரமும், பெரிய நிலங்களுக்கு 10 மீட்டர் உயரமும் கொண்ட தகர/உலோகத் தடுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இடிப்பு, அகழ்வாராய்ச்சி மற்றும் இதே போன்ற தூசி உருவாக்கும் நடவடிக்கைகளின் போது மனிதர்கள் மூலமாகவோ அல்லது இயந்திர ரீதியாகவோ தண்ணீர் தெளித்தல் அல்லது தூசி பரவாமல் தார்பாய் வைத்து மூடி வைப்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொருட்கள் அல்லது கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக சுமையுடன் ஏற்றக்கூடாது, தார்பாய் கொண்டு மூடப்பட்டு இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து கூறுகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே, சென்னை மோசமான காற்றின் தரம் கொண்ட நகரமாக மாறுவதை மாநகராட்சி நிர்வாகத்தால் திறம்பட தடுக்க முடியும். டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இதே போன்ற நடவடிக்கைகளால் வழிகாட்டுதல்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. மீறுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உடல் உபாதைகள்:

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் காற்று மாசுபாடு, குறிப்பிடத்தக்க சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது. அவற்றில் இருதய மற்றும் சுவாச நோய்கள், அத்துடன் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிற சுகாதார பிரச்னைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அரசின் நடவடிக்கைகள் மட்டுமின்றி தனிமனிதர்களும் ஒழுக்கத்தை பின்பற்றினால் மட்டுமே, தூசி மற்றும் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வந்து ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்க முடியும்.